
மார்ச் 5, 2013
ஆந்திர மாநிலம், சித்துாரில், பிள்ளையார்செட்டி பக்தவத்சலம் நாயுடு - தேவகி தம்பதியின் மகளாக, 1935 ஆகஸ்ட் 15ல் பிறந்தவர் ராஜசுலோசனா.
இவரின் தந்தை, ரயில்வே துறை, சென்னையில் பணிபுரிந்ததால், குடும்பத்துடன் மயிலாப்பூரில் குடியேறினார். வாய்ப்பாட்டு, வயலின், பரதநாட்டியம், குச்சுப்புடி, கதக்களி உள்ளிட்டவற்றை கற்றார்.
கன்னட திரைப்பட இயக்குநர் எச்.எல்.எம்.சிம்ஹா, இவரை, குணசாகரி என்ற படத்தில் நடிக்க வைத்தார். அதே படம் தமிழில், சத்திய சோதனை என்ற பெயரில் வெளியானது.
தொடர்ந்து, பெண்ணரசி, தை பிறந்தால் வழி பிறக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும், அரசிளங்குமரி, திருமால் பெருமை, நான் அவனில்லை, இதயக்கனி, எங்க வீட்டு வேலன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
நடனக்கலைஞர், நாயகி, வில்லி, நகைச் சுவை, குணச்சித்திர வேடங்களை ஏற்ற இவர், சென்னையில் நடனப் பள்ளியையும் நடத்தினார். ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., ராஜ்குமார் உள்ளிட்டோருடன் நடித்த இவர், தன் 77வது வயதில், 2013ல் இதேநாளில் மறைந்தார்.
'வசந்த முல்லை போலே வந்து, அசைந்து ஆடிய பெண் புறா' மறைந்த தினம் இன்று!