ADDED : மார் 07, 2025 12:21 AM
சென்னை:சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலையில் , 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான கருத்தரங்கம் நடந்தது.
இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், முன்னாள் கவர்னர் தமிழிசை, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, பா.ஜ., சமூக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் அர்ஜுனமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
பின், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் அளித்த பேட்டி:
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து, மாணவர்கள் மத்தியில் உரையாற்றினேன். இந்த சீர்திருத்த முயற்சியில், இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது, பல ஆயிரம் கோடி ரூபாயை அரசுக்கு மிச்சம் செய்யக்கூடிய மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கை.
இது, பல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் கொண்டு வரும். குறிப்பாக, பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும்.
தேர்தலில் ஓட்டு போடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் பற்றியும், ஜனநாயக முறை பற்றியும் விழிப்புணர்வு அதிகரிக்கும்.
அடிக்கடி தேர்தல் நடத்துவதன் மூலம், அரசுக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் மிச்சமாகும் பணத்தை, உட்கட்டமைப்பு வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றத்திற்கு செலவு செய்ய முடியும்.
தி.மு.க.,வுக்கு இது பிடிக்கவில்லை என்றால், பார்லிமென்டில் விவாதம் செய்யட்டும். அதை விட்டு சும்மா எதிர்க்கின்றனர் என்றால், அவர்களின் ஒரே நோக்கம், உதயநிதியை முதல்வராக்குவது தானே தவிர வேறு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.