'ஒருவரின் கண் தானத்தால் 4 பேருக்கு பார்வை கிடைக்கும்!'
'ஒருவரின் கண் தானத்தால் 4 பேருக்கு பார்வை கிடைக்கும்!'
ADDED : ஆக 31, 2024 01:05 AM

சென்னை: ''வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பத்தால், ஒருவர் அளிக்கும் கண் தானத்தால், நான்கு பேருக்கு பார்வை கிைடக்கும்,'' என, சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ.சி., மருத்துவமனையின் கண் டாக்டர் பிரகாஷ் பேசினார்.
தேசிய கண்தான விழிப்புணர்வு தினத்தையொட்டி, சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ.சி., மருத்துவமனையில், கண்தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மாணவர்களிடையே ஓவியப்போட்டி, கோலப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மருத்துவமனையின் கண் டாக்டர் எம்.வி.எஸ்.பிரகாஷ் பேசியதாவது:
உலகளவில், 1.5 கோடி பேர் பார்வையிழப்பால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், 35 லட்சம் பேர் கருவிழியால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்து உள்ளனர். இந்த கருவிழி பாதிப்பு, பிறவி கோளாறு, விபத்து, மரபணு போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.
கண் தானம் அளிக்கப்படுவதை காட்டிலும், தேவை அதிகமாக உள்ளது. கண் மாற்று அறுவை சிகிச்சை என்பது முழு கண்ணையும் எடுத்து மற்றவர்களுக்கு பொருத்துவது கிடையாது.
கண்ணின் கருவிழியை தான் தானம் பெற்று பொருத்துவர். கருவிழி கருப்பாக இருப்பது போல தெரிந்தாலும், ஒளி ஊடுருவும் வகையில், வெளிப்படையாக தெரியும் திசு. கருவிழியில் மிகவும் மெலிதான ஆறு அடுக்குகள் இருக்கும். அவை 500 முதல் 550 மைக்ரான்கள் அளவு தடிமானாக இருக்கும்.
சில நோயாளிகளுக்கு, ஆறு அடுக்குகள் உடைய கருவிழியின் மேல் பகுதியிலிருக்கும் இரண்டு, மூன்று அடுக்குகளில் மட்டும் பாதிப்பு ஏற்பட்டு பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கும். மீதமுள்ள அடுக்குகள் ஆரோக்கியமாக இருக்கும். இவர்களுக்கு, ஆறு அடுக்குகள் பொருத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.
அதிநவீன தொழில்நுட்ப மருத்துவ கருவிகள் வாயிலாக, அவை பிரித்தெடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட அடுக்குகள் மட்டும் பொருத்தப்பட்டு, பார்வை அளிக்கப்படும். இதுபோன்ற தொழில்நுட்ப உதவி வாயிலாகவே, ஒரு கருவிழியை, இரண்டு பேர் வீதம் என, நான்கு பேர் வரை பார்வை அளிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.