ADDED : ஏப் 12, 2024 08:39 PM
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு மேலும் கூறியதாவது:
தமிழகத்தில், 'பூத் சிலிப்' வழங்கும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 6.23 கோடி வாக்காளர்களில், 4.36 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது; மற்றவர்களுக்கு இன்றைக்குள் வழங்கப்படும்.
அதேபோல, வாக்காளர்அடையாள அட்டை, இன்னும் 6,000 பேருக்கு அனுப்ப வேண்டி உள்ளது. அவர்களுக்கு இன்று அல்லது நாளை விரைவு தபாலில் அனுப்பப்படும்.
அத்துடன் 100 சதவீத வாக்காளர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது என்ற நிலை எட்டப்படும்.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக, 'சி - விஜில்' மொபைல் ஆப்ஸ் வழியே, 3,605 புகார்கள் வந்தன. அவற்றில், 32 புகார்கள் விசாரிக்க வேண்டி உள்ளது; மற்றவை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மின்சார வசதி, குடிநீர் வசதி, சாய்தளவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், குறைந்ததுஒரு சக்கர நாற்காலி இருக்க வேண்டும். ஓட்டளிக்க வரும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் போன்றோருக்கு உதவ, அவர்களை சக்கர நாற்காலியில் அழைத்து செல்ல, தன்னார்வலர் ஒருவரை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், ஒரு துணை ராணுவ வீரர், வெப் கேமரா, வீடியோ கிராபர், மைக்ரோ பார்வையாளர் ஆகியோரில் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப் கேமரா பொருத்தப்படாவிட்டால், வீடியோ கிராபர் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ பதிவு செய்வார்.
மேலும், ஓட்டுச்சாவடிக்கு வெளியே தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை, காவல் துறையினர் செய்வர். திருவண்ணாமலையில் சாலை விபத்தில் துணை ரா ணுவ வீரர்கள் இருவர் இறந்ததாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் தகவல் வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், இந்த மாதத்திற்கான உரிமைத்தொகை வழங்க அனுமதி உண்டா என்று கேட்டதற்கு, ''ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தைச் செயல்படுத்த, தேர்தல் கமிஷன் அனுமதி தேவையில்லை. புதிய திட்டங்களுக்கு தான் அனுமதி பெற வேண்டும்,'' என்றார்.

