வி.ஏ.ஓ.,வுக்கு மிரட்டல் விடுத்த விவசாயிக்கு ஓராண்டு சிறை
வி.ஏ.ஓ.,வுக்கு மிரட்டல் விடுத்த விவசாயிக்கு ஓராண்டு சிறை
ADDED : ஆக 13, 2024 04:51 AM
விழுப்புரம்: வி.ஏ.ஓ.,வுக்கு மிரட்டல் விடுத்த விவசாயிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
செஞ்சி அடுத்த போத்துவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்,46; விவசாயியான இவர், கடந்த 2021ம் ஆண்டு, தனது நிலத்தில் பயிரிட்ட நெற்பயிரை காப்பீடு செய்ய வேண்டி, வி.ஏ.ஓ., சம்பத்குமாரிடம் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி சம்பத்குமார், செஞ்சி தாலுகா அலுவலகத்தில் இருந்தபோது, அங்கு வந்த ராமகிருஷ்ணன், என் மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை கேட்டார். அதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், ராமகிருஷ்ணன் தனது நிலத்திற்கு அடங்கல் கேட்டார். அதற்கு, உங்கள் நிலத்தில் பயிர் செய்யாததால், தரமுடியாது என சம்பத்குமார் கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன், சம்பத்குமாரை திட்டி, மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து சம்பத்குமார் அளித்த புகாரின் பேரில், ராமகிருஷ்ணனை கைது செய்த செஞ்சி போலீசார், அவர் மீது விழுப்புரம் எஸ்.சி., - எஸ்.டி., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, ராமகிருஷ்ணனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

