தொடரும் பட்டாசு ஆலை விபத்து: அரசு மீது எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு
தொடரும் பட்டாசு ஆலை விபத்து: அரசு மீது எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு
ADDED : மே 10, 2024 06:16 AM

சென்னை: 'விருதுநகர் மாவட்டத்தில் தொடரும், பட்டாசு ஆலை விபத்துகளுக்கு, அரசின் அலட்சியமே காரணம்' என, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதன் விபரம்:
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி:
சிவகாசி அருகே வெடி விபத்தில் இறந்தவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பூரண நலமடைய வேண்டுகிறேன்.
தி.மு.க., ஆட்சியில், விருதுநகர் மாவட்டத்தில் ஏற்படும் வெடி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து நான் அடிக்கடி சுட்டிக்காட்டியும், இதுவரை பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத, தி.மு.க., அரசின் மெத்தன போக்கை கண்டிக்கிறேன். இனி, இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்:
பட்டாசு ஆலை விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் அனைவருக்கும் தரமான சிகிச்சை வழங்குவதை, மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளாலும், பல முறை சுட்டிக்காட்டியும், அலட்சியம் காட்டும் அரசு நிர்வாகத்தாலும், பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இனியும் அலட்சியம் காட்டாமல், பட்டாசு ஆலைகளில், பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை, உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களின் உயிர்களை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி:
இதற்கு மாநில அரசின் அலட்சியமே காரணம். விதிகளை பின்பற்றாமல் அல்லது பாதுகாப்பு விதிகளை மீறி, தொழிற்சாலைகள் இயங்குவது, அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும், லஞ்சம் மற்றும் ஊழலினால் தான். உடனடியாக இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். சிவகாசியில் உள்ள பெரிய பட்டாசு நிறுவனங்களை ஆலோசித்து, தீர்வு காண தமிழக அரசு முனைய வேண்டும். இந்த மரணங்களுக்கு காரணமானவர்களுக்கு, கடும் தண்டனை பெற்று தர வேண்டிய பொறுப்பும், கடமையும், தமிழக அரசுக்கு உள்ளது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.