இன்னும் 20 அமாவாசைகள் தான் தமிழக அரசு ஆயுட்காலம்: உதயகுமார்
இன்னும் 20 அமாவாசைகள் தான் தமிழக அரசு ஆயுட்காலம்: உதயகுமார்
ADDED : ஆக 15, 2024 05:27 AM

சென்னை : கொலை குற்றங்களை மூடி மறைக்க முயற்சிக்கும் தி.மு.க., அரசுக்கு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில், வாடகை கொலையாளிகள் எந்தவித பயமும் இல்லாமல் உலா வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில், கொலைக் குற்றவாளிகள் கொடும் ஆயுதங்களால், சர்வ சாதாரணமாக பலரையும் கொலை செய்கின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை கன ஜோராக நடக்கிறது. இதில் ஆளும் தி.மு.க.,வினரே ஈடுபடுவதாகவும் செய்திகள் வருகின்றன. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் பழனிசாமி தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு முதல்வர் ஸ்டாலின், பொறுப்பான பதில் அளிக்கவில்லை. அதைவிடக் கொடுமை, தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், சட்டம் - ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும், டி.ஜி.பி., பேட்டி அளித்திருப்பது வேதனை அளிக்கிறது.
போதைப்பொருள் நடமாட்டத்தை தடுப்பதற்கு திறமையற்ற முதல்வராக உள்ள ஸ்டாலின், 'போதைப் பழக்கத்திற்கு அடிமையாக மாட்டோம்' என, மாணவர்களிடம் உறுதிமொழி எடுக்கச் சொல்வது, தி.மு.க., ஆட்சியின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது.
திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் கொலையில், இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், உண்மை குற்றவாளிகளை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை என, அவரது மனைவி, ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர். இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை.
இன்னும் 20 அமாவாசைகள்தான், தி.மு.க., ஆட்சியின் ஆயுட்காலம். இதை காவல் துறை அதிகாரிகள் மனதில் வைத்து, நடுநிலையோடு குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.