டிரைவர், கண்டக்டர் லைசென்ஸ்கள் வைத்திருப்போருக்கே இனி வேலை
டிரைவர், கண்டக்டர் லைசென்ஸ்கள் வைத்திருப்போருக்கே இனி வேலை
ADDED : மார் 07, 2025 12:32 AM
சிவகங்கை:தமிழகத்தில், டிரைவர், கண்டக்டர் ஆகிய இரு லைசென்ஸ்கள் இருந்தால் மட்டுமே, இனி அரசு பஸ்களில் தொழிலாளர்களாக தேர்வு செய்ய அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் சென்னையை தலைமையிடமாக கொண்டு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்களில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்கள் இருவருமே இரு லைசென்ஸ்கள் உடன் பணிபுரிந்து வருகின்றனர்.
இதனால், அதிக தொலைவிற்கு செல்லும் பஸ்களில் கண்டக்டர், டிரைவர் ஆகிய இருவரும் தங்கள் பணிகளை எளிதில் மாற்றிக்கொண்டு, பஸ்சை இயக்க முடியும். இதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் அசதியும் தவிர்க்கப்படும்.
இதே நடைமுறையை பிற மண்டலங்களின் கீழ் இயங்கும் அனைத்து அரசு போக்குவரத்து கழக பஸ்களிலும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக அளவில் அரசு பஸ்களில் காலியாக 2,000 டிரைவர், 700 கண்டக்டர் பணியிடங்கள் உள்ளன.
இந்த பணியிடங்கள் இனிவரும் காலங்களில் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மூலம் நியமிக்கப்படவுள்ளது. இந்த பணி நியமனத்தின் போது, கண்டிப்பாக டிரைவர், கண்டக்டர் பணிக்கு வரும் தொழிலாளர்கள், டிரைவர் மற்றும் கண்டக்டருக்கான இரண்டு லைசென்ஸ்களையும் வைத்திருக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பஸ்களுக்கு காலியாக உள்ள டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை நிரப்பும் போது இந்நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் இரு லைசென்ஸ் வைத்திருப்போர் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கும் விதம், வேலைவாய்ப்பு அலுவலக இயக்குனருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.