நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ஓய்வு பெற்றவர்களை நியமிக்க எதிர்ப்பு
நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ஓய்வு பெற்றவர்களை நியமிக்க எதிர்ப்பு
ADDED : மே 14, 2024 11:17 PM
சென்னை:மாநில நெடுஞ்சாலை ஆணைய நிர்வாகிகளாக, தற்போது பணியில் உள்ள அதிகாரிகளையே நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாடு முழுதும் உள்ள சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், லோக்சபாவில் சட்டம் இயற்றப்பட்டு 1988ல், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உருவாக்கப்பட்டது.
985 சுங்கச்சாவடிகள்
தற்போது, 1.32 லட்சம் கி.மீ., சாலைகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரித்து வருகிறது. இச்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கு, 985 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில், 6,600 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிப்பதற்கு 68 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கச் சாவடிகளில் கிடைக்கும் வருவாயை, சாலை மேம்பாட்டிற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பயன்படுத்தி வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை பின்பற்றி, மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி கட்டணம் வசூலிக்க, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக, மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பது தொடர்பான சட்ட மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இதைதொடர்ந்து, மாநில நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்கும் ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.
கோரிக்கை
தலைமை பொறியாளர் அந்தஸ்தில் ஓய்வு பெற்ற அதிகாரியை தலைவராகவும், கண்காணிப்பு பொறியாளர் அந்தஸ்தில் ஓய்வு பெற்ற நான்கு அதிகாரிகளை உறுப்பினர்களாகவும் நியமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொண்ட பின், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, தற்போது பணியில் உள்ள அதிகாரிகளையே தலைவராகவும், உறுப்பினர்களாகவும் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஓய்வு பெற்றவர்கள் அரசு பணியில் இருக்கும் போது, அவர்கள் தவறு செய்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே, மாநில நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, தற்போது பணியில் உள்ளவர்களை நியமிக்க வேண்டும். தற்போது, பணியில் உள்ளவர்கள் தான், துறை செயலர் உத்தரவுக்கு கட்டுப்பட்டு பணிபுரிவர்; ஓய்வு பெற்றவர்கள் தன்னிச்சையாக செயல்படுவர்.
-- எம்.மாரிமுத்து,
பொதுச்செயலர், நெடுஞ்சாலைத் துறை பட்டய பொறியாளர் சங்கம்.

