நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு கலெக்டர் பரிசீலிக்க உத்தரவு
நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு கலெக்டர் பரிசீலிக்க உத்தரவு
ADDED : ஜூன் 05, 2024 11:44 PM
மதுரை:புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் அரசு புறம்போக்கு மயான இடத்தில், முஸ்லிம்களுக்கான மயானமான, 'கபர்ஸ்தான்' அமைக்க கூடுதல் நிலம் கையகப் படுத்த தடை கோரியதில்,'ஆட்சேபனையை கலெக்டர் பரிசீலிக்க வேண்டும். அதுவரை தற்போதைய நிலை தொடர வேண்டும்' என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
பொன்னமராவதி ஜெ.ஜெ.நகர் உமையண்ணா தாக்கல் செய்த பொதுநல மனு:
பொன்னமராவதி மேற்கு கிராமத்தில் குறிப்பிட்ட சர்வேஎண்ணிலுள்ள நிலத்தை ஹிந்துக்கள் மயானமாக பயன்படுத்துகின்றனர்.
அதில் அரசு தரப்பில் கட்டுமானங்கள், ஆழ்துளை கிணறு, தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. முறையாக பராமரிக்காததால் ஆக்கிரமிப்புகள் முளைத்தன.
மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி நவீன மயானம் அமைக்கப்படும் என்றனர்.
'அரசு புறம்போக்கு மயானம் என வகைப்பாட்டிலுள்ள அந்த இடத்தில் முஸ்லிம்களுக்கான மயானத்திற்கு கூடுதல் நிலம் கையகப்படுத்தப்படஉள்ளது.
ஆட்சேபனை இருப்பின், 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்' என, பொன்னமராவதி வருவாய் ஆய்வாளர் மே 3ல் அறிவிப்பு வெளியிட்டார்.
ஹிந்துக்கள் பயன்படுத்தும் நிலத்தை சரியாக கள ஆய்வு செய்யாமல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
கபர்ஸ்தான் அமைக்க நிலம் கையகப்படுத்தும் வருவாய் ஆய்வாளரின் அறிவிப்பிற்கு, இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: மனுதாரரின் ஆட்சேபனையை கலெக்டர்பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை இவ்விவகாரத்தில்தற்போதைய நிலை தொடர வேண்டும். வழக்கு பைசல் செய்யப் படுகிறது.
இவ்வாறு நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.