விசைத்தறிக்கு எதிராக வழக்கு தீர்ப்பாயத்தை அணுக உத்தரவு
விசைத்தறிக்கு எதிராக வழக்கு தீர்ப்பாயத்தை அணுக உத்தரவு
ADDED : மே 21, 2024 06:55 AM
மதுரை : திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடியில் தடை செய்யப்பட்ட நேரத்தில், சட்ட விரோதமாக செயல்படும் விசைத்தறிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில், பசுமை தீர்ப்பாயத்தை அணுக, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
புளியங்குடியை சேர்ந்த முப்பிடாதி என்பவர் தாக்கல் செய்த மனு:
புளியங்குடியில் தடை செய்யப்பட்ட நேரமான மாலை, 6:00 முதல் காலை, 6:00 மணி வரை சட்ட விரோதமாக சில விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை கோரி, கலெக்டர், புளியங்குடி நகராட்சி கமிஷனர், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளருக்கு 2018ல் மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் தவறாக இந்த நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இவ்வழக்கை விசாரிக்கும் அதிகார வரம்பு தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு உள்ளது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட சில விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பு தெரிவித்தது.
மனுவை, கலெக்டர், நகராட்சி கமிஷனர் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தேவையெனில் மனுதாரர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம். மனு பைசல் செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.

