சீமான் பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதி பாதுகாப்பு கட்டணம் வசூலிக்க உத்தரவு
சீமான் பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதி பாதுகாப்பு கட்டணம் வசூலிக்க உத்தரவு
ADDED : மார் 14, 2025 09:05 PM
சென்னை:திருப்போரூரில் சீமான் பங்கேற்கும் பொது கூட்டம், பேரணிக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், 'பொது இடங்களில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதற்கான கட்டணத்தை, கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் வரும் 16ல், நாம் தமிழர் கட்சி சார்பில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், பஞ்சமி நிலங்களை மீட்க கோரியும், பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை, திருப்போரூர் போலீசார் நிராகரித்தனர். இதை எதிர்த்தும், கூட்டம், பேரணிக்கு அனுமதி கோரியும், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலர் சசிகுமார் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 'பேரணி, பொதுக் கூட்டத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும். பாதுகாப்பு வழங்கும் காவல் துறைக்கு, மனுதாரர் 25,000 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
இதற்கு மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி கூறியதாவது:
பொது மக்களை பாதுகாக்கவும், சட்டம் - -ஒழுங்கை பாதுகாக்கவும் தான் காவல் துறை. தினமும் கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, காவல் துறையின் பணி அல்ல. பொது மக்கள் அரசுக்கு செலுத்தும் வரிப் பணத்தில், காவல் துறை செயல்படுகிறது. மக்கள் பணத்தை வீணடிக்கக்கூடாது.
திருப்போரூரில் நடக்கும் பேரணியில் சட்டம்--ஒழுங்கு பிரச்னை ஏதேனும் நிகழ்ந்து, இழப்பு ஏற்பட்டால், அதற்கு மனுதாரர் கட்சி தான் பொறுப்பேற்க வேண்டும்.
காவல் துறை பாதுகாப்புக்காக, 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என பிறப்பித்த உத்தரவு நீக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில், பொது இடங்களில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கன கட்டண தொகையை, சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.