ADDED : மே 24, 2024 04:44 AM

சென்னை : 'எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்ய மாட்டார்' என உத்தரவாதம் அளிக்க, சவுக்கு சங்கர் தரப்புக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்த விசாரணையை, இன்றைக்கு தள்ளி வைத்து உள்ளது.
பெண் போலீசாரை அவதுாறாக பேசியதாக அளித்த புகாரில், 'யு டியூபர்' சங்கர் கைது செய்யப்பட்டார். பின், கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, சென்னை மாநகர போலீஸ் ஆணையர், கடந்த 12ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்தும், கோவை சிறையில் தாக்கப்பட்டது குறித்த புகாரை, தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க கோரியும், சங்கரின் தாய் கமலா, தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தார்.
இம்மனுக்கள், நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தன. நீதிபதிகளின் உத்தரவின்படி, குண்டர் சட்டத்தில் கைது செய்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களும், போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.
மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் ஜான் சத்யன், ஸ்ரீசரண், அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகினர்.
இரண்டு மனுக்களின் விசாரணையை, இன்றைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். 'எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார், என்னவெல்லாம் செய்ய மாட்டார்' என்பதற்கு உத்தரவாதம் அளித்து, மனுத் தாக்கல் செய்யும்படி, சங்கர் தரப்புக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
'பெண் போலீசார் பற்றி பேசியது, முதல்வரை ஒருமையில் பேசியது, இவற்றை எல்லாம் ஏற்க முடியாது' எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.