ADDED : ஜூலை 31, 2024 12:30 AM
சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில், உலகத் தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்த மனுவில், 'உள்நாட்டு விமானங்களில், தமிழில் அறிவிப்புகள் வழங்குவது இல்லை.
'மலேஷியா, இலங்கை, பிரான்ஸ் போன்ற நாடுகளில், விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்கப்படுகின்றன. எனவே, உள்நாட்டு விமானங்களில், தமிழில் அறிவிப்புகளை வழங்க வேண்டும். இதுகுறித்து அனுப்பிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி குமரேஷ்பாபு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகளை வழங்கக் கோரி, மனுதாரர் தரப்பில் அளித்த மனுவை, 12 வாரங்களில் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்துக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
வழக்கு விசாரணையை முடித்து வைத்தது.

