முதலியார்குப்பத்தில் முகத்துவாரத்தை ஆக்கிரமித்தவர்கள் விபரம் தர உத்தரவு
முதலியார்குப்பத்தில் முகத்துவாரத்தை ஆக்கிரமித்தவர்கள் விபரம் தர உத்தரவு
ADDED : ஜூலை 26, 2024 11:43 PM

சென்னை: சென்னை -- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், முதலியார்குப்பம், பரமன்கேணியில் முகத்துவார பகுதியை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியவர்கள் பற்றிய முழு விபரங்களை தெரிவிக்குமாறு, செங்கல்பட்டு கலெக்டருக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
'கிழக்கு கடற்கரை சாலை முதலியார்குப்பம் முகத்துவாரம் அருகே, கடலோர ஒழுங்கு முறை மண்டல ஆணைய அனுமதி பெறாமல், சுற்றுலா வளர்ச்சி கழகம், கழிப்பறைகள், குடில்கள், கான்கிரீட் துாண்கள், சுற்றுச்சுவர்களை கட்டுகிறது.
'இந்த சட்ட விரோதமான கட்டுமானங்களை தடுக்க உத்தரவிட வேண்டும்' என, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கண்ணப்பன் என்பவர், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தீர்ப்பாயத்தில், இந்த வழக்கு விசாரணையின் போது, 'வருவாய் துறையும், தமிழக கடலோர மண்டல மேலாண்மை ஆணையமும், சர்ச்சைக்குரிய இடத்தை ஆய்வு செய்த போது, முதலியார்குப்பம், பரமன்கேணி கிராமங்களில், கடலோர ஒழுங்கு முறை மண்டல அறிவிப்பை மீறி கட்டுமானங்கள் கட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
முதலியார்குப்பம், பரமன்கேணி பகுதியில், கடலோர ஒழுங்கு முறை மண்டல சி.ஆர்.இசட்., வரம்புக்குள் வரும் முகத்துவார பகுதியை ஆக்கிரமித்து, கட்டடங்கள் கட்டிய ரகுராம், ஞானசேகரன் உள்ளிட்ட மூன்று பேரை அடையாளம் கண்டுள்ளோம் என, செங்கல்பட்டு கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
முகத்துவார பகுதியை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியவர்களின் முழு அஞ்சல் முகவரி உள்ளிட்ட விபரங்களை, அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்ய வேண்டும்.
அடையாளம் காணப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் மூவரையும், இந்த வழக்கில் சேர்க்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 5ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

