அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று விடுப்பு வழங்க உத்தரவு
அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று விடுப்பு வழங்க உத்தரவு
ADDED : ஏப் 24, 2024 01:51 AM
சென்னை:'தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள், கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் ஓட்டுப்பதிவு நடக்கும் நாளில், அந்த மாநிலத் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்' என, தொழிலாளர் நலத் துறை கமிஷனர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிக்கை:
கேரளாவில் 26ம் தேதி, கர்நாடகாவில் வரும் 26, மே 5 ஆகிய நாட்களில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. ஆந்திராவில் மே 13 சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது.
தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில் நிறுவனங்கள், அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலத் தொழிலாளர்கள், அவர்களின் மாநிலத்திற்கு சென்று ஓட்டளிக்க ஏதுவாக, அந்தந்த தேர்தல் நாட்களில், ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.
தேர்தல் நாட்களில், ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக, தமிழகத்தில் பணிபுரியும் சம்பந்தப்பட்ட மாநிலத் தொழிலாளர்கள் புகார் அளிக்க, மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

