அரசுப்பள்ளிகளில் மே 3ல் சிறப்பு மேலாண்மை கூட்டம் நடத்த உத்தரவு
அரசுப்பள்ளிகளில் மே 3ல் சிறப்பு மேலாண்மை கூட்டம் நடத்த உத்தரவு
ADDED : ஏப் 28, 2024 02:33 AM
தேனி,: தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்களை உள்ளடக்கிய மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கு தேவையான மற்றும் மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்கான விபரங்கள் தொடர்பாக இக்குழுக்கள் கூட்டம் நடத்தி முடிவெடுத்தன. தற்போது தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் மே 3ல் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் மதியம் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து அவர்கள் துணைத் தேர்வு எழுத உதவி செய்தல், அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டுதல், பள்ளிக்கு வரும் நன்கொடைகளை முறைப்படுத்துதல் குறித்து ஆலோசிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்புக்கூட்டத்தில் பங்கேற்கும் மாவட்ட கள அலுவலர்கள் கூட்டம் தொடர்பான அறிக்கையை அன்றிரவு 8:00 மணிக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

