பொதுநல வழக்கு தொடர்ந்தவரின் பின்புலத்தை விசாரிக்க உத்தரவு
பொதுநல வழக்கு தொடர்ந்தவரின் பின்புலத்தை விசாரிக்க உத்தரவு
ADDED : ஜூன் 27, 2024 02:01 AM
மதுரை:ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோவில் ஸ்படிக லிங்க பூஜைக்கு இலவச தரிசன வரிசை ஏற்படுத்த, பொதுநல வழக்கு தொடர்ந்த, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மனுதாரரின் பின்புலம் குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய திருச்சி எஸ்.பி.,க்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.
ஸ்ரீரங்கம் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:
நாங்கள் பரம்பரையாக புரோகிதம் செய்கிறோம். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஸ்படிக லிங்கம் பூஜைக்கு தரிசன கட்டணமாக 50 முதல், 200 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
இலவச பொது தரிசன வரிசை ஏற்படுத்தாதது பக்தர்களுக்கு மன உளைச்சலை தருகிறது. இந்த நடைமுறை இயற்கை நீதிக்கு புறம்பானது; ஹிந்து தர்மத்திற்கு எதிரானது. பாகுபாடின்றி, பக்தர்களை கட்டணமின்றி கடவுளை வழிபட அனுமதிக்க வேண்டும். பொது இலவச தரிசன வரிசை ஏற்படுத்தக்கோரி, அறநிலையத்துறை கமிஷனர், கோவில் இணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு:
இதுபோன்ற நிவாரணம் வழங்க உத்தரவிட இயலாது. மனுதாரர் தொடர்ந்து இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்கிறார்.
அவரது பின்புலம் என்ன; அவருக்கு யாரும் பக்கபலமாக மறைமுக ஆதரவு தருகின்றனரா; எதிராக வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா என்பது குறித்து விசாரிக்க தனிப்படை போலீசாரை திருச்சி எஸ்.பி., நியமிக்க வேண்டும். விசாரணை அறிக்கையை நாளை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.