மாணவர்களுக்கு தாமதமின்றி உறுதி சான்றிதழ் தர உத்தரவு
மாணவர்களுக்கு தாமதமின்றி உறுதி சான்றிதழ் தர உத்தரவு
ADDED : ஜூலை 28, 2024 11:55 PM

சென்னை: உறுதி சான்றிதழை கால தாமதமின்றி, உடனே சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பள்ளிக்கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கு, மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர, 7.5 சதவீத இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. அதற்காக, தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு, உறுதிச் சான்றிதழ் கேட்டு மாணவர்கள் வருகின்றனர்.
அந்த மாணவர்கள், ஆறு முதல் எட்டா-ம் வகுப்பு வரை ஒரு பள்ளியிலும்; ஓன்பது முதல் பிளஸ் 2 வரை வேறு பள்ளியிலும் பயின்றுள்ள நிகழ்வுகளில், கடைசியாக பயின்ற பள்ளியில் இருந்து, இந்த சான்றிதழ் வழங்க தாமதம் ஏற்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.
இதுபோல, வெவ்வேறு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சார்பான விபரங்களை, 'எமிஸ்' தளத்தில் இருந்து பெற்று, அதன்படி உறுதி சான்றிதழை, கால தாமதமின்றி உடனே மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

