இலவச சுற்றுலா என மோசடி ரூ.1.5 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
இலவச சுற்றுலா என மோசடி ரூ.1.5 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
ADDED : ஜூன் 13, 2024 01:55 AM
சென்னை:சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த முகமது இம்ரான், நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
கோடம்பாக்கத்தில், அலெக்ரியா ஹாலிடேஸ் என்ற சுற்றுலா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவன பிரதிநிதி, 2022 ஜூனில் தொடர்பு கொண்டு, சுற்றுலா திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்தால், மாலத்தீவுக்கு இலவசமாக தங்குமிடத்துடன் கூடிய சுற்றுலா அழைத்து செல்வோம் என்றார்.
தொடர் அழைப்பை அடுத்து, 1.57 லட்சம் ரூபாய் செலுத்தி, அந்த நிறுவன திட்டத்தில், ஜூலை 25 முதல் உறுப்பினராக இணைந்தேன். வரும் 2042 வரை உறுப்பினராக தொடர முடியும் என்றும் கூறினர்.
ஆனால் உறுதியளித்தபடி, மாலத்தீவுக்கு இலவச சுற்றுலா அழைத்து செல்லவில்லை. விளக்கம் கேட்டும் உரிய பதிலை அளிக்கவில்லை.
நியாயமற்ற வணிக நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய தனியார் சுற்றுலா நிறுவனம், உறுப்பினர் கட்டணத்தை திருப்பி செலுத்துவதோடு, உரிய இழப்பீடும் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாய தலைவர் பி.ஜிஜா, உறுப்பினர்கள் டி.ஆர்.சிவகுமார், எஸ்.நந்தகோபாலன் அடங்கிய அமர்வு, 'வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் சுற்றுலா நிறுவனத்துக்கு, நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.
'நியாயமற்ற வணிக நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, சேவை குறைபாடுடன் நடந்த நிறுவனம், பாதிக்கப்பட்ட மனுதாரர் செலுத்திய உறுப்பினர் கட்டணத்தை திருப்பி செலுத்துவதோடு, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக, 1.5 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.