நடிகர் பெற்ற ரூ.50 லட்சம் கடன் வட்டியுடன் செலுத்த உத்தரவு
நடிகர் பெற்ற ரூ.50 லட்சம் கடன் வட்டியுடன் செலுத்த உத்தரவு
ADDED : மே 04, 2024 12:50 AM

சென்னை:தனியார் நிறுவன உரிமையாளரிடம் இருந்து பெற்ற, 50 லட்சம் ரூபாய் கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தும்படி, நடிகர் யூகி சேதுவுக்கு, சென்னை 19வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் யூகி சேது என்ற சேதுராமன், சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளரான ஆர்.சுரேஷ்குமார் என்பவரிடம், 2017ம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் கடன் கேட்டுள்ளார். ஆறு மாதங்களில் திருப்பி அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இதை நம்பி, முதல் தவணையாக 20 லட்சம் ரூபாய், இரண்டாவது தவணையாக 10 லட்சம், 3வது தவணையாக 20 லட்சம் ரூபாய் என, யூகி சேதுவுக்கு சுரேஷ்குமார் வழங்கியுள்ளார். ஆனால், உறுதி அளித்தபடி யூகி சேது கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை.
இதையடுத்து, யூகி சேதுவுக்கு எதிராக, சென்னை 19வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சுரேஷ்குமார் சார்பில், பொது அதிகாரம் பெற்ற அவரது மருமகன் அஸ்வினிகுமார் தலால், சிவில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
கடன் தொகையை திருப்பி செலுத்தும்படி, மனுதாரரின் மகள், மருமகன், பொது அதிகாரம் பெற்ற அஸ்வினிகுமார் தலால் ஆகியோர், பலமுறை யூகி சேதுவிடம் கேட்டுள்ளனர். ஆனால், அவர் திருப்பி செலுத்துவதை தவிர்த்து வந்துள்ளார்.
மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களில் உள்ள கையெழுத்து, யூகி சேது உடையது என்பது உறுதியாகியுள்ளது. எனவே, யூகி சேது தான் பெற்ற 50 லட்சம் ரூபாயை, 9 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.