பந்தநல்லுார் பசுபதீஸ்வரர் கோவில் நிலம் சர்வேக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு
பந்தநல்லுார் பசுபதீஸ்வரர் கோவில் நிலம் சர்வேக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு
ADDED : ஏப் 05, 2024 11:18 PM
மதுரை:தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லுார் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சர்வே செய்யும் அலுவலர்களுக்கு, போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:
பந்தநல்லுார் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 913 ஏக்கர் நிலம் உள்ளது.
இச்சொத்துக்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களை அறநிலையத்துறை முறையாக பராமரிக்கவில்லை. பல சொத்துக்களை அடையாளம் காண முடியவில்லை. சிலர் சட்ட விரோதமாக சொத்துக்களை அனுபவித்து வருகின்றனர்.
கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.சொத்துக்களை சர்வே செய்து மீட்கக் கோரி அறநிலையத்துறை கமிஷனர், செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த மனுவை, நீதிபதி சி.சரவணன் விசாரித்தார்.அரசு தரப்பில், 'கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் சர்வே செய்யும் பணி 86 சதவீதம் முடிந்துள்ளது.
மீதம் 14 சதவீத பணியை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதி: சர்வே பணியை 3 மாதங்களில் முடிக்க வேண்டும். அப்பணியில் ஈடுபட்டுள்ள அறநிலையத்துறை அலுவலர்களுக்கு திருவிடைமருதுார் டி.எஸ்.பி.,போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.

