தீக்குளித்த வாலிபர் குடும்பத்துக்கு ரூ.10.70 லட்சம் வழங்க உத்தரவு
தீக்குளித்த வாலிபர் குடும்பத்துக்கு ரூ.10.70 லட்சம் வழங்க உத்தரவு
ADDED : ஆக 07, 2024 02:07 AM
சென்னை:போலீஸ் நிலையம் முன் தீக்குளித்து இறந்தவரின் குடும்பத்துக்கு, 10.70 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலுார் மாவட்டம், குகையநல்லுார் காலனியைச் சேர்ந்தவர் சரத்குமார்; ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது சகோதரர், மாற்று சமுதாய பெண்ணை காதலித்துள்ளார். அதற்கு சரத்குமாரை, மேல்பாதி போலீஸ் நிலைய எஸ்.ஐ., கார்த்தி, அவமானப்படுத்தி உள்ளார்.
இதனால் வேதனை அடைந்த சரத்குமார், போலீஸ் நிலையம் முன் தீக்குளித்தார். படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். 2022 ஏப்ரலில் சம்பவம் நடந்தது.
இதையடுத்து, எஸ்.ஐ.,க்கு எதிராக, வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சரத்குமார் குடும்பத்துக்கு, 1.30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. உரிய இழப்பீடு வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் சரத்குமாரின் தாய் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், 12 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது என்றும், ஏற்கனவே வழங்கிய தொகையை கழித்து, மீதி 10.70 லட்சம் ரூபாயை, நான்கு வாரங்களில் அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.