ADDED : மார் 05, 2025 05:30 AM
சென்னை; கோடை காலத்தையொட்டி, குளிர்பான கடைகள் மற்றும் ஜூஸ் கடைகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ள, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் உத்தரவிட்டு உள்ளார்.
கோடை காலம் துவங்கி இருப்பதால், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஜூஸ், குளிர்பானங்கள் விற்பனை கடைகளில் தொடர் ஆய்வு செய்து, அவற்றின் தரத்தை உறுதி செய்யுமாறு, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:
குளிர்பானம், குடிநீர் சுத்திகரிப்பு, ஜூஸ், பழக்கடைகளில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், பாதுகாப்பான மற்றும் தரமான பொருட்கள் வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதன்பின், அவ்வப்போது தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதில், சுகாதாரமற்ற மற்றும் கெட்டுப் போன, காலாவதியான பொருட்கள் இருந்தால், அபராதம் விதிப்பதுடன், பதிவு உரிமமும் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.