ADDED : பிப் 15, 2025 01:07 AM

சென்னை:ஏர் இந்தியா நிறுவனம் மீது, தென்சென்னை தொகுதி தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் புகார் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை:
நேற்று முன்தினம் இரவு 9:20 மணிக்கு, டில்லியில் இருந்து சென்னை வர, ஏர் இந்தியா விமானத்தில் 'பிசினஸ் கிளாஸ்' இருக்கையை முன்பதிவு செய்திருந்தேன்.
விமானத்தில் ஏறிய போது, நான் முன்பதிவு செய்திருந்த இருக்கை எனக்கு கிடைக்கவில்லை. எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, சாதாரண இருக்கையை எனக்கு ஒதுக்கீடு செய்தனர்.
எம்.பி.,யான எனக்கே இந்த நிலை என்றால், மற்ற பயணியரிடம் இந்நிறுவனம் எப்படி நடந்து கொள்ளும் என்பதை நினைத்து பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது.
பயணியருக்கான உரிமைகள் மற்றும் சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் புறக்கணிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது போன்ற செயல்களுக்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், 'உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்கு வருந்துகிறோம். இந்த புகார் குறித்து பேச விரும்புகிறோம்; அதற்கான நேரத்தை சொல்லுங்கள்' என்று பதில் அளித்துள்ளது.