"கல்லால் அடிப்போம் என மக்கள் எச்சரிக்கை' - ப.சிதம்பரம் பிரசாரத்தில் பரபரப்பு
"கல்லால் அடிப்போம் என மக்கள் எச்சரிக்கை' - ப.சிதம்பரம் பிரசாரத்தில் பரபரப்பு
ADDED : ஏப் 02, 2024 10:33 AM

காரைக்குடி: சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தனது மகன் கார்த்திக்கு ஆதரவு கேட்டு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிரசாரம் செய்தபோது கிராம மக்கள் பல கேள்விகளை எழுப்பியதால் பதில் சொல்ல முடியாமல் திணறினார். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மித்ராவயல் என்ற பகுதியில் திறந்தவேனில் சிதம்பரம் பிரசாரம் செய்தார். மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பினர். இவரால் பேச முடியவில்லை. அப்போது சிதம்பரம் மக்களை பார்த்து ' கையெடுத்து கும்பிடுகிறேன், நான் சொல்வதை முதலில் கேளுங்கம்மா, என்று கெஞ்சினார். எனக்கு பேச உரிமை இருக்கு, உங்களுக்கும் உரிமை இருக்கு. நான் பேசி முடிச்சதும் பேசுங்கம்மா என்றார்.
தொடர்ந்து பெண்கள் கேட்ட ஆவேச கேள்வி வருமாறு:
' டாஸ்மாக் கடையை அகற்ற முடியவில்லை, ஒரே வீட்டில குடிச்சு 3 பேர் செத்து போயிட்டாங்க. குடிச்சுப்புட்டு பலர் வேலைக்கே போவதில்லை, எனது மகனுக்கு வேலை கிடைக்கவில்லை. எங்கள் கேள்விக்கு உரிய பதில் சொல்லுங்கள்,
இது வரை தொகுதி பக்கமே கார்த்தி வரவில்லை. தொகுதிக்கு என்ன செஞ்சீங்க.? 40 வருடத்திற்கு முன்பு இருந்த ஆஸ்பத்திரி வசதி இப்ப இல்லை. ஒரு ஆஸ்பத்திரி கூட இல்லை. இனிமேல் யாரும் இந்த பக்கம் ஓட்டு கேட்டு வரக்கூடாது. காங்கிரசுக்கும் ஓட்டு போட முடியாது. யாரும் வந்தால் கல்லை கொண்டு அடிப்போம் ' என எச்சரித்தனர். சிதம்பரத்துடன் வந்த நிர்வாகிகள் கிராம மக்களை சமரசம் செய்தனர். இதனையடுத்து பிரசாரத்தை பாதியில் முடித்து விட்டு திரும்பினார் சிதம்பரம்.
மும்முனை போட்டி
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம், அதிமுக சார்பில் சேவியர்தாஸ், பா.ஜ. கூட்டணி சார்பில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார்.

