ADDED : ஏப் 26, 2024 04:59 AM

சென்னை: 'பஸ்களை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்' என, இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.
அவரது சமூக வலைதள பதிவு:
திருச்சி நகர பஸ் சென்று கொண்டிருக்கையில், ஒரு வளைவில் கண்டக்டர் இருக்கையுடன் வெளியே விழுந்த சம்பவம், தமிழக மக்களிடம், குறிப்பாக அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணியர் இடையே, மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன், சென்னை மாநகர பஸ்சில், பயணம் செய்த பெண்பயணி ஒருவர் கீழே விழுந்து, விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே, இனியாவது அரசு பஸ்களை, உரிய முறையில் பராமரிப்பு செய்ய வேண்டும்.
அரசு பஸ்களில் பயணம் செய்பவர்களுக்கு, பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும் என, தி.மு.க., அரசை வலியுறுத்தி இருந்தேன்.
ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள், பொதுமக்களிடம் அரசு பஸ் குறித்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி உள்ளன. எனவே, இனியாவது தி.மு.க., அரசு விழித்துக் கொண்டு, அரசு பஸ்களின் ஆயுட்காலத்தை, முன்பிருந்தது போல குறைத்து, புதிய பஸ்கள் வாங்க வேண்டும்.
இயங்கிக் கொண்டிருக்கும் பஸ்களை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் இருக்கையுடன் கண்டக்டர் துாக்கி வீசப்பட்டுள்ளார். பஸ்சின் டயர் தனியாக கழன்று ஓடுவது, மேற்கூரை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்றவை நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசு பஸ்களை தி.மு.க., அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்.
மொத்தம் உள்ள 20,926 அரசு பஸ்களில் 1,500 பஸ்கள், 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளை கடந்த பஸ்களை இயக்குவதே சட்ட விரோதம். தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன.
போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலைக்கு காரணம். இதற்கு திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

