தி.மு.க., கூட்டணி கட்சிகள் நம்மிடம் வரும் அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் பழனிசாமி உறுதி
தி.மு.க., கூட்டணி கட்சிகள் நம்மிடம் வரும் அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் பழனிசாமி உறுதி
ADDED : ஆக 02, 2024 10:12 PM
'தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள், நம்முடன் கூட்டணிக்கு கட்டாயம் வரும். அங்குள்ள கட்சிகள் நம்மிடம் பேசி வருகின்றன. எனவே, கூட்டணி குறித்து கவலைப்படாமல், கட்சிப் பணியாற்றுங்கள்' என, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி உற்சாகம் ஊட்டி அனுப்பி உள்ளார்.
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவின. அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதே, தோல்விக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் கட்சியின் ஓட்டு வங்கி சரிந்துள்ளது.
எனவே, அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என, நிர்வாகிகள் இடையே பேச்சு எழுந்துள்ளது. மூத்த நிர்வாகிகள் ஆறு பேர், பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தியதாகவும், தகவல் வெளியானது.
இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து தொகுதிவாரியாக, கட்சி நிர்வாகிகளுடன், பொதுச்செயலர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், பன்னீர்செல்வம், சசிகலா குறித்து சிலர் பேச முயற்சித்தனர். அப்போது, 'கட்சியில் அவர்கள் உறுப்பினர்களே இல்லை. மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. வெளியில் பரவும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்' எனக் கூறி, அப்பிரச்னைக்கு பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்தார்.
அடுத்தடுத்த கூட்டங்களில், அவர்கள் குறித்து பேச யாரும் அனுமதிக்கப்படவில்லை. தோல்விக்கான காரணம் குறித்து சில நிர்வாகிகள் கூறுகையில், பலமான கூட்டணி இல்லாதது முக்கியக் காரணம் என்றனர்.
அதற்கு பதில் அளித்து, பழனிசாமி கூறியிருப்பதாவது:
வரும் சட்டசபைத் தேர்தல் கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். அதை கட்சித் தலைமை பார்த்துக் கொள்ளும். தீவிரமாக கட்சிப் பணியாற்றுங்கள். மக்களை சந்தியுங்கள். நம் ஆட்சி சாதனைகளையும், தி.மு.க., ஆட்சியின் அவலங்களையும் தொடர்ந்து எடுத்துக் கூறுங்கள். சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை போன்றவற்றை, வீடு வீடாக சென்று, விளக்கமாக எடுத்துச் சொல்லுங்கள்.
சட்டசபை தேர்தலில் பலமான கூட்டணி அமையும். தி.மு.க., கூட்டணியில் இருந்து, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறும். அதற்கான தகவல்களும், பாசிட்டிவ் சமிக்கைகளும் அந்தப் பக்கம் இருந்து தொடர்ந்து வருகின்றன. தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க.,வால் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை, அக்கட்சிகள் முன்வைக்கும். அவற்றை தி.மு.க., ஏற்காது. அதை காரணம் காட்டி, அவர்கள் கட்டாயம் வெளியேறுவர்.
தற்போது, விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள், தி.மு.க., அரசுக்கு எதிராக போராட துவங்கி உள்ளனர். இதைச் சுட்டிக் காட்டி, நமக்கும் இரு கட்சியில் இருப்போர், நமக்கும் தகவல் அனுப்பி உள்ளனர். அதையடுத்து, அவர்களுடன் நாம் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். அடுத்து ஆட்சியை பிடிப்பதற்கான, அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம்.
எனவே, நீங்கள் கூட்டணி குறித்து கவலைப்படாமல், புதிய நபர்களை கட்சியில் சேர்த்து பலப்படுத்துங்கள். மாதம்தோறும் நிர்வாகிகள் கூட்டம் போடுங்கள். பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பழனிசாமி பேச்சை பிரதிபலிக்கும் வகையில், நிருபர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ''தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சிகள், எங்களிடம் தான் கட்டாயம் வரும்,'' என்றார்.
பபுள்: அப்புறமென்ன கிளியும் சொல்லிடுச்சில்ல...
- நமது நிருபர் -