தி.மு.க., எதிர் பா.ஜ., என்ற நிலையை மாற்ற மும்மொழி எதிர்ப்பில் பழனிசாமி மும்முரம்
தி.மு.க., எதிர் பா.ஜ., என்ற நிலையை மாற்ற மும்மொழி எதிர்ப்பில் பழனிசாமி மும்முரம்
ADDED : பிப் 22, 2025 08:49 PM
சென்னை:அ.தி.மு.க., எதிர்கொள்ளும் நெருக்கடிகளை சமாளிக்க, மும்மொழி கொள்கை எதிர்ப்பை தீவிரமாக்க, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி முடிவு செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
'புதிய கல்வி கொள்கையின் ஓர் அங்கமான பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காவிட்டால், தமிழகம் 5,000 கோடி ரூபாய் மத்திய அரசு நிதியை இழக்க வேண்டியிருக்கும்' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது, தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் பா.ஜ., தவிர, அனைத்து அரசியல் கட்சிகளும் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 'மும்மொழி கொள்கை என்பது மறைமுகமாக ஹிந்தியை திணிக்கும் முயற்சிதான். 5,000 கோடி ரூபாய் அல்ல, 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டாலும், மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம். நிதி தர மாட்டோம் என்றால், வரி கொடுக்க மாட்டோம் என்று சொல்ல, ஒரு நொடி ஆகாது' என, முதல்வர் ஸ்டாலின் காட்டமாக பேசியுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் உள்ளிட்டோரும் கடுமையான சொற்களால், மத்திய பா.ஜ., அரசை விமர்சித்து வருகின்றனர். அதற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கடும் ஆவேசத்துடன் பதிலடி கொடுத்து வருகிறார்.
இதனால், இவ்விவகாரம் தி.மு.க., -- பா.ஜ., இடையிலான போராக மாறியுள்ளது. 'கெட்-அவுட் மோடி' என தி.மு.க.,வினரும், 'கெட்-அவுட் ஸ்டாலின்' என பா.ஜ.,வினரும், 'எக்ஸ்' தளத்தில் டிரெண்டிங் போட்டியில் இறங்கியுள்ளனர்.
மும்மொழி கொள்கைக்கு அ.தி.மு.க., உள்ளிட்ட முக்கிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், இந்த விவகாரத்தால், தமிழக அரசியல் களம், 'தி.மு.க., எதிர் பா.ஜ.,' என மாறியுள்ளது. இதை அ.தி.மு.க.,வினர் விரும்பவில்லை.
இந்நிலையில், பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என கூறுவது, தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம். இதனால் மத்திய பா.ஜ., அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்' என, கடுமையாக விமர்சித்துள்ளர்.
இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட, அ.தி.மு.க., உள்கட்சி விவகாரங்கள் தொடர்பாக, தேர்தல் ஆணையம் விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. தி.மு.க.,வை தோற்கடிக்க, சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் போன்றவர்களை கட்சியில் இணைத்து, அ.தி.மு.க.,வை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள், பழனிசாமிக்கு எதிராக பேச துவங்கியுள்ளனர். இதனால், அ.தி.மு.க., மீண்டும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நெருக்கடிகளை சமாளிக்கவும், தமிழக அரசியல் களம், 'தி.மு.க., எதிர் பா.ஜ.,' என மாறுவதை தடுத்து, தி.மு.க.,வுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சி என அ.தி.மு.க.,வை நிலைநிறுத்தவும், மும்மொழி கொள்கைக்கான எதிர்ப்பை தீவிரப்படுத்த பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
எனவே, அடுத்தடுத்த நாட்களில், மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க.,விடம் இருந்து தொடர் அறிக்கைகளும், தமிழகம் தழுவிய போராட்டத்திற்கான அறிவிப்பும் வரும் என்று, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
***