'தோற்றாலும் வென்றாலும் விலகுவார்' அண்ணாமலை குறித்து பழனிசாமி யூகம்
'தோற்றாலும் வென்றாலும் விலகுவார்' அண்ணாமலை குறித்து பழனிசாமி யூகம்
ADDED : மே 02, 2024 02:53 AM
'லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் பதவியில் நீடிக்கப் போவதில்லை' என, கட்சி நிர்வாகிகளிடம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த 2016ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின், பன்னீர்செல்வமும், பழனிசாமியும் முதல்வராக இருந்து அ.தி.மு.க., ஆட்சியை வழி நடத்தினர். இதில், நாலு ஆண்டு காலம், மத்திய பா.ஜ., அரசின் முழு ஆதரவோடு, ஆட்சி அதிகாரத்தை செலுத்தினார் பழனிசாமி.
அடுத்து 2021ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க., போட்டியிட்டது. ஆனால், தமிழக அரசியல் களமும், தி.மு.க., கட்டமைத்த கூட்டணியும் சாதகமாக இருக்க, தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தமிழக எதிர்க்கட்சித் தலைவராக பழனிசாமி செயல்பட்டார்.
இந்நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற முடியாமல் போனதற்கு, பா.ஜ.,வுடனான கூட்டணியே காரணம் என்று, அ.தி.மு.க.,வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் தொடர்ந்து சொல்ல, கூட்டணியை மறுபரிசீலனை செய்யும் முடிவுக்கு வந்தார் பழனிசாமி.
அந்த சமயத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'கடந்த காலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அ.தி.மு.க.,வும் ஊழல் கட்சிதான்; தண்டிக்கப்பட வேண்டியது தான்' என்று அதிரடியாக புகார் கூறினார். 'மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஊழல் வழக்குக்காக தண்டிக்கப்பட்டவர்' என்றும் கூறினார்.
இதையடுத்து, அ.தி.மு.க., தொண்டர்கள் பா.ஜ.,வுக்கு எதிராக கொந்தளிக்க, அதை சாக்காக வைத்து, கூட்டணியில் இருந்து விலகினார் பழனிசாமி. தமிழகத்தில் தன் தலைமையில் காங்., - வி.சி.,க்களை இணைத்து, நடப்பு லோக்சபா தேர்தலுக்கு வலுவான கூட்டணியை கட்டமைக்கலாம் எனவும் திட்டமிட்டு, பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஆனால், அவர் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இறுதியில் தே.மு.தி.க.,வை மட்டும் வைத்துக் கொண்டு லோக்சபா தேர்தலை சந்தித்தார். அ.தி.மு.க.,வுக்கான வெற்றி முகம், எந்தத் தொகுதியிலும் தென்படவில்லை. இதனால், கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் பழனிசாமி மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த இக்கட்டான நிலைக்கு அண்ணாமலையே முழு காரணம் என நினைக்கும் பழனிசாமி, அதையே தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் கூறி வந்தார். அவர்களிடம் அந்தக் கருத்து எடுபடவில்லை. இதனால் அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக, புது கருத்துச் சொல்லத் துவங்கி உள்ளார்.
'கோவையில் அண்ணாமலை வெற்றி பெற வாய்ப்பில்லை. அதையும் மீறி வெற்றி பெற்றால், அவர் மத்திய அமைச்சராகி டில்லி சென்று விடுவார். தோல்வியடைந்தால், தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக பா.ஜ., தலைவர் பதவியை ராஜினாமா செய்வார். எப்படியிருந்தாலும், தமிழக பா.ஜ., தலைவர் பதவி, தேர்தல் முடிவுக்குப் பின் அவரிடம் இருக்காது. அடுத்த சட்டசபைத் தேர்தலுக்குள் அ.தி.மு.க.,வை வெற்றிக் கட்சியாக மாற்றி விடலாம்' என கூறி தெம்பூட்டி வருகிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

