ஸ்டாலினுக்கு பொய்க்கு 'நோபல்' பரிசு தரலாம்: பழனிசாமி
ஸ்டாலினுக்கு பொய்க்கு 'நோபல்' பரிசு தரலாம்: பழனிசாமி
UPDATED : ஏப் 16, 2024 11:22 AM
ADDED : ஏப் 16, 2024 08:41 AM

சென்னை : ''பொய் பேசுவதற்கு நோபல் பரிசு தருவதாக இருந்தால், ஸ்டாலினுக்கு தாராளமாக தரலாம்,'' என, தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பேசினார்.
காஞ்சிபுரம் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர், மத்திய சென்னை வேட்பாளர் தே.மு.தி.க.,வின் பார்த்தசாரதி, தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து, அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி, காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:
தி.மு.க.,வின் மூன்றாண்டு ஆட்சியில் என்ன செய்துள்ளனர்? எங்களை பற்றி விமர்சிப்பதையே முதல்வர் வழக்கமாக கொண்டுள்ளார். விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அரிசி விலை கிலோ, 18 ரூபாய் உயர்ந்துள்ளது. மளிகை பொருட்கள் விலை, 40 சதவீதம் உயர்ந்து விட்டது. தி.மு.க., அரசில் கட்டுமான பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. 190 ரூபாய்க்கு விற்ற சிமென்ட், 390க்கு விற்கப்படுகிறது. நகரத்தில் உள்ளவர்கள் இனி மேல் வீடு கட்டுவது சிரமம்; கனவில் தான் கட்ட முடியும். இதை கட்டுப்படுத்த முதல்வருக்கு திராணி இல்லை.
அவர் தலைமையில் ஊழல் நடக்காத துறையே இல்லை. லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது. 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தது தான் தி.மு.க.,வின் இரண்டாண்டு சாதனை. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மின் கட்டணம் உயர்ந்து விடுகிறது. மின் வெட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க., ஆட்சி எப்போதேல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.
வழிப்பறி, கொள்ளை, பாலியல் வன்கொடுமை ஆகியவை, தமிழகத்தில் அதிகரித்துள்ளன. போதைப்பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கஞ்சா விற்பனை. போதைப்பொருள் வழக்கில் தி.மு.க.,வின் அயலக அணியை சேர்ந்த ஒருவர், டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தியவர்களுடன், தி.மு.க,வுக்கு தொடர்பு உள்ளது.
தி.மு.க, ஊழலின் ஊற்றுக்கண்; தமிழகத்தில் போலீசுக்கே பாதுகாப்பில்லை. போலீஸ்காரர்கள் பைக்கையே, திருடர்கள் பிடுங்கிச் சென்றுள்ளனர். கனிமொழி பாதுகாப்புக்கு சென்ற பெண் போலீசின் புகாரை கண்டுகொள்ளவே இல்லை. கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், 520 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். 10 சதவீதம் மட்டுமே நிறைவேற்றியுள்ளார். நிறைவேற்றியதாக அவர் கூறுவது எல்லாமே பொய்; வாய் திறந்தால் பொய் தான். பொய் பேசுதவற்கு, 'நோபல்' பரிசு தருவதாக இருந்தால், ஸ்டாலினுக்கு தருவது பொருத்தமாக இருக்கும்.
நம்மை கள்ள கூட்டணி என்று சொல்லும் தி.மு.க., பெட்ரோல், டீசல் விலையை பற்றி, மத்திய அரசிடம் கேள்வி கேட்பதில்லை. உண்மையிலேயே அவர்கள் தான் கள்ள கூட்டணி. அ.தி.மு.க., கொண்டு வந்த மடிக்கணினி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏன் இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி. பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடக்கிற தேர்தல் இது. நமக்கும் தி.மு.க.,வுக்கு 3 சதவீத ஓட்டுகள் தான் வித்தியாசம். இந்த தேர்தலில் ஓங்கியடித்து வெற்றி அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

