ADDED : மார் 23, 2024 01:07 AM
சென்னை:''ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். நாம் அமைத்துள்ள பூத் கமிட்டி உறுப்பினர்களை வேலை வாங்கி, அனைத்து ஓட்டுகளையும் பெற முயற்சி செய்யுங்கள்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, கட்சியினருக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், பழனிசாமி பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
இதுகுறித்து, நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
நம் கட்சி சார்பில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் பூத் கமிட்டி அமைத்துள்ளோம். ஒவ்வொரு கமிட்டியிலும், குறைந்தது 50 பேர் உள்ளனர். அவர்களின் குடும்ப ஓட்டுகளை சேர்த்தால், 200 ஓட்டுகளாவது வரும். பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது நான்கு ஓட்டுகளை நம் பக்கம் இழுத்தால், அந்த ஓட்டுச் சாவடியில் அதிக ஓட்டுகளை நாம் பெற்று விட முடியும்; வெற்றி எளிதாகும்.
ஒரு ஓட்டுச்சாவடியில் ஒரு ஓட்டு குறைந்தாலும், லோக்சபா தொகுதிக்கு, 1,500 ஓட்டுகள் வரை குறைந்து விடும். எனவே, ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். கடந்த தேர்தல்களில், குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினோம்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டோர், தபால் ஓட்டளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஓட்டுகளை பெற, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லும் போது, பூத் ஏஜன்ட்கள் உடன் செல்ல வேண்டும்.
மாவட்ட செயலர்கள், மகளிர் அணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை என, அனைத்து அணிகளையும் அரவணைத்து, தேர்தல் பணியாற்ற வேண்டும் என, பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

