மா.செ.,க்கள் மீது புகார் சொல்ல பழனிசாமி தடை: நிர்வாகிகள் அதிருப்தி
மா.செ.,க்கள் மீது புகார் சொல்ல பழனிசாமி தடை: நிர்வாகிகள் அதிருப்தி
ADDED : ஜூலை 26, 2024 03:49 AM

சென்னை: அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட செயலர்கள் குறித்து பேச அனுமதிக்காதது, நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆரணி, தென்காசி நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது குறித்து கட்சியினர் கூறியதாவது:
ஆரணி கூட்டத்தில், போளூர் ராஜன் என்பவர், மாவட்ட செயலர் ஜெயசுதா மீது, சில குற்றச்சாட்டுகளை வைத்தார். அப்போது பழனிசாமி குறுக்கிட்டு, 'தனிப்பட்ட நபர்கள் குறித்து பேச வேண்டாம்' என கண்டித்ததும், 'பேசுவதற்கு தானே கூட்டம்' என அவர் எதிர்த்து பேச, பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது துணை பொதுச்செயலர் முனுசாமி குறுக்கிட்டு, 'ஜெயலலிதா இருந்தால் இப்படி பேசுவீர்களா? பொதுச்செயலர் அமரச் சொன்னால், உடனே அமர வேண்டும்' என அறிவுரை கூறி, அமர வைத்தார்.
தென்காசி கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என நிர்வாகிகளிடம் பழனிசாமி கேட்டார். அதற்கு நிர்வாகிகள், 'ஒரே சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோர் போட்டியிட்டதால், ஓட்டுகள் பிரிந்து விட்டன. நம் கட்சி வேட்பாளரை களம் இறக்கி இருந்தால், கட்சி வெற்றியடைந்திருக்கும்' என்றனர்.
அதை கேட்ட பழனிசாமி, 'நம் கட்சி சின்னத்தில் தான் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். நீங்கள் கடுமையாக உழைத்திருந்தால், அவர் வெற்றி பெற்றிருப்பார். வேட்பாளர் குறித்து கவலைப்படாமல், சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும். சட்டசபை தேர்தலில், நீங்கள் எதிர்பார்க்கும் வலுவான கூட்டணி அமையும்' என்றார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டம் குறித்து, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:
கட்சி வளர்ச்சி குறித்து பழனிசாமி பேசினார். சட்டசபை தேர்தலுக்கான களப்பணியை துவக்கி உள்ளோம். தேர்தல் வியூகத்தை பழனிசாமி அமைத்து கொடுத்துள்ளார். மத்திய அரசு பட்ஜெட்டில், தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது வருத்தம் அளிக்கிறது.
அனைவருக்கும் பொதுவானவர் பிரதமர். தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்காதது தவறு. தமிழகத்திற்கு மத்திய நிதி ஒதுக்காதது தவறு. அதற்கு அழுத்தம் கொடுக்காதது, தி.மு.க., அரசின் தப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.

