ADDED : ஜூலை 15, 2024 02:43 AM
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், ஏரலில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டி:
தமிழகத்தில் குளச்சல் பகுதியில் வர வேண்டிய துறைமுகம், கேரளாவின் விழிஞ்ஞம் பகுதிக்குச் சென்று விட்டது. தென் மாவட்டங்களில், எந்த வளர்ச்சி திட்டங்களும் வரக் கூடாது என குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தோர், கண்ணும் கருத்துமாக உள்ளனர்.
தமிழகத்தை நிர்வாகம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்காக மூன்றாக பிரிக்க வேண்டும். தி.மு.க., அரசை யார் விமர்சனம் செய்தாலும் அவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
ஆனால், 'இந்தியா ஒழிக' என்று சுவர் விளம்பரம் எழுதியவரை, கைது செய்ய நடவடிக்கை இல்லை. தமிழகத்தில் தொடர் கொலை சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம், உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது.
இதற்காக மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் கண்டனத்தை பதிவு செய்கிறேன். தமிழக சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து, மத்திய அரசுக்கு தமிழக கவர்னர் உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தது முன்னாள் முதல்வர் பழனிசாமி தான். எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சியை விட சிறப்பான ஆட்சி கொடுத்தவர் பழனிசாமியே.
இவ்வாறு அவர் கூறினார்.

