அ.தி.மு.க.,வை உடைக்க ஸ்டாலின் முயற்சி ஆரணியில் பழனிசாமி பேச்சு
அ.தி.மு.க.,வை உடைக்க ஸ்டாலின் முயற்சி ஆரணியில் பழனிசாமி பேச்சு
ADDED : ஏப் 12, 2024 12:56 AM

திருவண்ணாமலை:''அ.தி.மு.க.,வை உடைக்க ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். எவ்வளவு தடை வந்தாலும், அத்தனையும் தகர்த்தெறிந்து, லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெறும்,'' என, பழனிசாமி பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து, நேற்று மாலை ஆரணியில் நடந்த பொதுக்கூட்டத்தில், பழனிசாமி பேசியதாவது:
கட்சி நிர்வாகிகளை பணி செய்ய விடாமல் இடையூறு செய்தும், முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டும், அ.தி.மு.க.,வை உடைக்க ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார்.
வெற்றி பெறும்
எவ்வளவு தடை வந்தாலும், அத்தனையும் தகர்த்தெறிந்து, அ.தி.மு.க., வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெறும்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்கள், இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஆசி இருக்கும் வரை, ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது.
ஸ்டாலின் என்று முதல்வரானாரோ, அன்றே தமிழகத்திற்கு சனி பிடித்து விட்டது. எனவே, அந்த ஏழரை சனியை, இத்தேர்தலில் அகற்ற வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சியில் உணவு உற்பத்தியில், 3 லட்சம் டன் உணவு பொருள் உற்பத்தி செய்து, தேசிய விருது பெற்றது. இதுபோன்று நிர்வாக திறமையால், மின்சாரம், போக்குவரத்து, பொதுப்பணித்துறை என, பல்வேறு துறைகள் மூலம், 140 தேசிய விருதுகள் பெற்றது.
ஆனால், தி.மு.க., அரசு அது போன்று ஏதாவது ஒரு விருது பெறுகிறதா என்றால் இல்லை. நிர்வாகத் திறமையற்ற அரசு நடந்து கொண்டிருக்கிறது. ஸ்டாலின் திட்டங்களை அறிவிப்பார்; அதற்கு ஒரு பெயர் வைப்பார்; ஒரு குழு அமைப்பார். இதுபோல, 52 குழுக்களை அமைத்துள்ளார்.
என்ன நன்மை?
போட்ட திட்டங்களை கிடப்பிலே போட்டு விடுவார். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து, 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. எல்லா துறையும் ஊழல். ஏற்கனவே ஊழலுக்காக, தி.மு.க., அரசு, கலைக்கப்பட்டுஉள்ளது.
ஏற்கனவே, மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்து, '2 ஜி' மூலம், 1.72 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்தனர். அதுபோல, மீண்டும் மத்தியில் ஆட்சியில் பங்கேற்று கொள்ளை அடிக்க துடிக்கிறார்.
உதயநிதி, ஒற்றை செங்கல்லை துாக்கிக் கொண்டு ஊர் ஊராக செல்கிறார். இதனால், மக்களுக்கு என்ன நன்மை?
இந்த செங்கல்லை, லோக்சபாவிலே காட்டி, எய்ம்ஸ் கட்ட கால தாமதம் ஆவதை சுட்டிகாட்டி, விரைவாக கட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விட்டு, விளம்பரத்திற்காக ஒற்றை செங்கல்லை துாக்கிக் கொண்டு செல்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து திருவண்ணாமலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்தும் பழனிசாமி பேசினார்.

