sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிதறல், சேதாரம் பற்றி கவலைப்படாதீங்க கட்சி செயற்குழுவில் பழனிசாமி பேச்சு

/

சிதறல், சேதாரம் பற்றி கவலைப்படாதீங்க கட்சி செயற்குழுவில் பழனிசாமி பேச்சு

சிதறல், சேதாரம் பற்றி கவலைப்படாதீங்க கட்சி செயற்குழுவில் பழனிசாமி பேச்சு

சிதறல், சேதாரம் பற்றி கவலைப்படாதீங்க கட்சி செயற்குழுவில் பழனிசாமி பேச்சு


ADDED : ஆக 16, 2024 08:42 PM

Google News

ADDED : ஆக 16, 2024 08:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.

சென்னையில் அக்கட்சி அவசர செயற்குழுக் கூட்டம், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடந்தது. பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டம் துவங்கியதும், துணை பொதுச்செயலர் கே.பி.முனுசாமி பேசுகையில், 'கட்சியினரை சந்திக்க, மாவட்ட வாரியாக பழனிசாமி சுற்றுப்பயணம் செல்ல வேண்டும்' என்றார்.

பொருளாளர் சீனிவாசன் பேசுகையில், 'துரோகிகள் குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் குறித்து இனி பேச வேண்டாம்' என்றார்.

முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசுகையில், 'நமக்குள் உள்ள குறைகளை களைந்து, உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலுக்கு தயாராவோம்' என்றார்.

கடைசியாக, பழனிசாமி பேசியுள்ளதாவது:

லோக்சபா தேர்தல் தோல்வியை மறந்து, அடுத்து வர உள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும். சிதறல் மற்றும் சேதாரம் குறித்து கவலைப்படாமல், தற்போதுள்ளவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்.

சட்டசபை தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் உட்பட பல கட்சிகள், நம் கூட்டணிக்கு வரும். ஆளும்கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தி.மு.க., அரசின் அவலங்கள் குறித்து, தெருமுனைக் கூட்டம் நடத்தி, மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். மக்களுடன் நெருக்கமாக இருங்கள். நம் கட்சி, பெரிய கட்சி என்பதை உணர்ந்து பணியாற்றுங்கள்.

அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெற்று, நம் சக்தியை நிரூபிக்க வேண்டும். விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் வர உள்ளேன். பயணத்திட்டம் தயாராகி வருகிறது. கட்சியில் புதிய உறுப்பினர்களை சேருங்கள். மாற்று கட்சியில் இருந்து வருவோரையும் அரவணைத்து பணியாற்றுங்கள். நம்பிக்கையோடு செயல்படுங்கள்; எதிர்காலம் நம் கையில். விரைவில் தொண்டர்களையும் மக்களையும் அவர்கள் பகுதிக்கே வந்து சந்திக்கிறேன்.

இவ்வாறு பழனிசாமி பேசியுள்ளார்.

'சாதனை ஆட்சி அல்ல; வேதனை ஆட்சி'


தீர்மானங்கள் விபரம்:
* ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காததையும், இலவச வேட்டி சேலை, பள்ளிச் சீருடைகள் வழங்குவதில் மெத்தனப்போக்கோடு தி.மு.க., அரசு செயல்படுவதையும் கண்டிக்கிறோம்
* மக்கள் நலன் கருதி, மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்
* தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்ற தவறிய, தி.மு.க., அரசின் மெத்தனப்போக்கு கண்டிக்கத்தக்கது. இதுவரை கண்களை மூடிக் கொண்டிருந்தது போதும். இனியாவது விழித்துக் கொண்டு, தமிழகத்தின் உரிமைகளை காக்க, உறுதியோடு இருக்க வேண்டும்
* தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத, தி.மு.க., அரசையும், மீனவர்கள் நலனில் அக்கறை செலுத்தாத, தி.மு.க., மற்றும் மத்திய அரசையும் கண்டிக்கிறோம்
* மத்திய பட்ஜெட்டில், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை அறிவிக்காததுடன், போதுமான நிதியையும் ஒதுக்க மறுத்த மத்திய அரசை கண்டிக்கிறோம்
* மருத்துவ காப்பீடு பிரீமியத்திற்கான, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியை, மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்
* கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக, மத்திய அரசு அறிவிக்க வேண்டும்
* தி.மு.க., அரசின் மூன்றாண்டு கால ஆட்சி, சாதனை ஆட்சி அல்ல; வேதனை ஆட்சி. நிர்வாகத் திறமையின்மை காரணமாக, கடன் மேல் கடன் வாங்கியும், வரி மேல் வரி விதித்தும், மக்களை கடனாளியாக்கியதுதான், தி.மு.க., அரசின் சாதனை
* தொழில் வளர்ச்சி குன்றியதற்கான காரணங்களை அறிந்து, அவற்றை சரிவர நிவர்த்தி செய்யாததுடன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைய காரணமாக இருக்கும் தி.மு.க., அரசை கண்டிக்கிறோம்
* வரும் உள்ளாட்சி தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., மகத்தான வெற்றி பெறும் வகையில், நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கனியை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



'பா.ஜ., - தி.மு.க., ரகசிய உறவு!'


''பா.ஜ., - தி.மு.க., இடையே ரகசிய உறவு, அதாவது கள்ள உறவு உள்ளது. இதை சிறுபான்மையின மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்,'' என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:கட்சி சட்டதிட்ட விதிகளின்படி, செயற்குழுக் கூட்டம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டும். செயற்குழுவை கூட்ட 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும். ஏழு நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டதால், அவசர செயற்குழுவாக நடத்தப்பட்டது.கவர்னர் தேநீர் விருந்தில், அ.தி.மு.க., பங்கேற்றது. தி.மு.க., கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. தி.மு.க., பங்கேற்காது எனக் கூறிவிட்டு, அரசு சார்பில் கலந்து கொள்கிறோம் என்கின்றனர்.தி.மு.க., தலைவர் வேறு, ஸ்டாலின் வேறு என்கின்றனர். தேநீர் விருந்துக்கு அமைச்சர்கள் வரிந்து கட்டிக் கொண்டு சென்றனர்.
எங்கு பார்த்தாலும் கருணாநிதி சிலை வைக்கின்றனர். மத்திய அரசிடம் கெஞ்சி கூத்தாடி, 100 ரூபாய் நாணயம் வெளியிடுகின்றனர். எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி, எம்.ஜி.ஆர்., உருவம் பொறித்த நாணயத்தை, நாங்களே வெளியிட்டோம்.கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவுக்கு, ராகுலை கூப்பிடாமல் ராஜ்நாத் சிங்கை அழைத்துள்ளனர். தமிழக எம்.பி.,க்களுக்கு பா.ஜ., தேசிய தலைவர் நட்டா விருந்து வைக்கிறார்.
பா.ஜ., - தி.மு.க., இடையே ரகசிய உறவு, அதாவது கள்ள உறவு உள்ளது. இதை சிறுபான்மையின மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா செல்ல உள்ளார். அதற்காக மத்திய அரசுக்கு கூஜா துாக்குகின்றனர்.கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில், அ.தி.மு.க., பங்கேற்காது. பா.ஜ., - தி.மு.க.,வைப் போல இரட்டை வேடம் போட மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.***








      Dinamalar
      Follow us