சிதறல், சேதாரம் பற்றி கவலைப்படாதீங்க கட்சி செயற்குழுவில் பழனிசாமி பேச்சு..
சிதறல், சேதாரம் பற்றி கவலைப்படாதீங்க கட்சி செயற்குழுவில் பழனிசாமி பேச்சு..
ADDED : ஆக 17, 2024 02:12 AM

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த அக்கட்சி அவசர செயற்குழு கூட்டம், அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடந்தது. பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டம் துவங்கியதும், துணை பொதுச்செயலர் முனுசாமி பேசுகையில், 'கட்சியினரை சந்திக்க, மாவட்டம் வாரியாக பழனிசாமி சுற்றுப்பயணம் செல்ல வேண்டும்' என்றார்.
பொருளாளர் சீனிவாசன் பேசுகையில், 'துரோகிகள் குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் குறித்து இனி பேச வேண்டாம்' என்றார்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசுகையில், 'நமக்குள் உள்ள குறைகளை களைந்து, உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலுக்கு தயாராவோம்' என்றார்.
கடைசியாக பழனிசாமி பேசியுள்ளதாவது:
லோக்சபா தேர்தல் தோல்வியை மறந்து, அடுத்து வரவுள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும். சிதறல் மற்றும் சேதாரம் குறித்து கவலைப்படாமல், தற்போதுள்ளவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்.
சட்டசபை தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் உட்பட பல கட்சிகள், நம் கூட்டணிக்கு வரும். ஆளுங்கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தி.மு.க., அரசின் அவலங்கள் குறித்து, தெருமுனை கூட்டம் நடத்தி, மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்; மக்களுடன் நெருக்கமாக இருங்கள். நம் கட்சி, பெரிய கட்சி என்பதை உணர்ந்து பணியாற்றுங்கள்.
அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெற்று, நம் சக்தியை நிரூபிக்க வேண்டும். விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் வர உள்ளேன். பயணத் திட்டம் தயாராகி வருகிறது. கட்சியில் புதிய உறுப்பினர்களை சேருங்கள். மாற்று கட்சியில் இருந்து வருவோரையும் அரவணைத்து பணியாற்றுங்கள். நம்பிக்கையோடு செயல்படுங்கள்; எதிர்காலம் நம் கையில். விரைவில் தொண்டர்களையும், மக்களையும் அவர்கள் பகுதிக்கே வந்து சந்திக்கிறேன்.
இவ்வாறு பழனிசாமி பேசியுள்ளார்.