கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா குறித்து பழனிசாமியின் பேச்சு முதிர்ச்சியற்றது: ஹெச்.ராஜா
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா குறித்து பழனிசாமியின் பேச்சு முதிர்ச்சியற்றது: ஹெச்.ராஜா
ADDED : ஆக 20, 2024 08:08 PM
புதுக்கோட்டை:''கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா குறித்து, பழனிச்சாமியின் பேச்சு முதிர்ச்சியற்றது,'' என, பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி:
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா ஏன் சர்ச்சையாக வேண்டும். மாற்று சிந்தனையை கொண்டு பா.ஜ.,வை வளர்த்து வருகிறோம். சமுதாயத்தில் தீண்டாமை இருப்பது தவறு. அதுபோல, அரசியலிலும் தீண்டாமை இருப்பது நல்லதல்ல.
பா.ஜ.,வின் பல நிகழ்ச்சிகளுக்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வந்துள்ளார். அப்படி இருக்கும்போது, கருணாநிதி நூற்றாண்டை ஒட்டி நடத்தப்பட்ட நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சி மட்டும் ஏன் சர்ச்சையாக்கப்பட வேண்டும்?
'பா.ஜ.,வோடு தி.மு.க., ரகசிய கூட்டணி வைத்துள்ளது' என்று பழனிசாமி கூறுகிறார். அதற்கு தி.மு.க., தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால், பா.ஜ.,வுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது.
தலித்துகள் முதல்வராக முடியாது என்று திருமாவளவன் கூறியுள்ளார். அது தவறான கருத்து. பா.ஜ., ஆளும் பல மாநிலங்களில் தலித் இனத்தைச் சேர்ந்தோர் முதல்வர் ஆக்கப்பட்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் தலித்தை ஏன் முதல்வராக்கவில்லை என, அவருடைய கூட்டணி கட்சித் தலைவரான ஸ்டாலினிடம்தான் கேட்க வேண்டும். அவருக்கு முதல்வராக விருப்பம் இருந்தால், அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். நான் முதல்வராக வருவதை தி.மு.க., தடுக்கிறது என்றும் அறிவிக்க வேண்டும்.
முதல்வர் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்வதாக சொல்கின்றனர். அவர் முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா அல்லது முதலீடு செய்யப் போகிறாரா என சொல்ல வேண்டும்.
உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்பட்டாலும், தமிழக ஆட்சி நிர்வாகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. தி.மு.க., கூட்டணியில் கடும் குழப்பம் உள்ளது. அது என்னவென்று விரைவில் தெரியும்.
கவர்னர் அளித்த விருந்துக்கு தி.மு.க., வந்தது. ஆனால், கூட்டணி கட்சியினர் வரவில்லை. கூட்டணிக்குள் குழப்பம் இருப்பதாலேயே இதெல்லாம் நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

