பள்ளிப்பட்டில் கைதானோருக்கு சீன மோசடி கும்பலுடன் தொடர்பு
பள்ளிப்பட்டில் கைதானோருக்கு சீன மோசடி கும்பலுடன் தொடர்பு
ADDED : செப் 15, 2024 12:40 AM
சென்னை:பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைதான, திருவள்ளூரை சேர்ந்த நான்கு பேருக்கு, சீனாவை சேர்ந்த சைபர் மோசடி கும்பலுடன் தொடர்பு இருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
'மும்பையில் இருந்து சி.பி.ஐ., அதிகாரிகள் பேசுகிறோம்; உங்கள் பெயரில் போதைப்பொருள் வந்துள்ளது' எனக்கூறி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் தொழில் அதிபரிடம், ஒரு கும்பல், 2.16 கோடி ரூபாய் பறித்துள்ளது. தொடர்ந்து, அந்த மோசடி கும்பல், சி.பி.ஐ., அதிகாரி, டில்லி போலீஸ் அதிகாரிகள் பெயர்களை கூறியும், அவரிடம் பணம் பறிக்க முயன்றுள்ளது.
இதையடுத்து, அவர் அளித்த புகாரை விசாரித்த ஜெய்ப்பூர் சைபர் கிரைம் போலீசார், அமலாக்கத்துறை உதவியை நாடினர். அமலாக்கத்துறை அதிகாரிகள், மோசடி கும்பலின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை மீட்பது, மோசடி கும்பலை கைது செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டனர். வழக்கு தொடர்பாக, பெங்களூரை சேர்ந்த சசிகுமார், சச்சின், கிரண், சரண்ராஜ் ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜெய்ப்பூர் தொழில் அதிபரிடம் அபகரித்த பணத்தை, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த தமிழரசன், 29, அஜித், 28, பிரகாஷ், 26, அரவிந்தன், 23 ஆகியோர், போலி நிறுவனங்கள் பெயரில் வங்கி கணக்கு துவக்கி பரிமாற்றம் செய்திருப்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து, அவர்கள் நான்கு பேரும், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, நான்கு நாட்கள் காவலில் விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அமலாக்கத்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்ட தமிழரசனுக்கு, சீனாவை சேர்ந்த, 'சைபர்' மோசடி கும்பலுடன் தொடர்பு இருப்பதும், 28 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது; விசாரணை தொடர்கிறது.