ADDED : மார் 23, 2024 11:26 PM

மயிலம்: மயிலம் முருகர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று நடந்தது.
மயிலத்தில்பழமை வாய்ந்த வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு கடந்த15ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர பெரு விழா துவங்கியது.
தினசரி உற்சவருக்கு பூஜைகள் செய்யப்பட்டு தங்கமயில் வாகனம், யானை, குதிரை, நாக வாகனங்களில் கிரிவல காட்சியளித்தார். நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடந்தது.
நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மயிலம்பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
முதலில் விநாயகர் தேரும் தொடர்ந்து வள்ளி, தெய்வானை, சமேத சுப்ரமணியர் சுவாமி தேரடி வீதியில் வலம் வந்தார். அப்போது தேரடியில் கூடியிருந்த பக்தர்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த வேர்க்கடலை, கம்பு, மிளகாய், உளுந்து உள்ளிட்ட தானியங்களை தேரடியில் வீசி நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர்.
பின்னர்தேர்காலை 7.35 மணிக்குநிலைக்கு வந்தடைந்தது. தொடர்ந்து உற்சவருக்கு மகா தீபாரதனை செய்தனர். பின்னர் மூலவருக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடுகள் நடந்தது.
பக்தர்கள் அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும், மொட்டை அடித்தும், அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.விழா ஏற்பாடுகளைமயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.

