ADDED : மே 01, 2024 11:42 PM
சென்னை:முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
பிரமலைக் கள்ளர் வகுப்பை சேர்ந்த மக்களின் கல்வி தரத்தை மேம்படுத்த, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், 213 தொடக்கப் பள்ளிகள், 22 நடுநிலைப் பள்ளிகள், 20 உயர்நிலைப் பள்ளிகள், 40 மேல்நிலைப் பள்ளிகள், மூன்று உண்டு உறைவிடப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை கீழ் இயங்குகின்றன.
இவற்றில் 27,000த்துக்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படிக்கின்றனர்.
கடந்த 2023 - 24ம் ஆண்டு பட்ஜெட்டில், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், பள்ளிக் கல்வித் துறை கீழ் கொண்டு வரப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இதற்கு, கள்ளர் சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்த தும், அப்பள்ளிகள் பள்ளிக் கல்வித் துறையோடு சேர்க்கப்படாது என, துறை அமைச்சர்கள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
அதை மீறி, கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தை, சில நாட்களுக்கு முன், தி.மு.க., அரசு கூட்டியுள்ளது. இப்பள்ளிகள் துவக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையில், இவற்றை பள்ளிக் கல்வித் துறையோடு இணைப்பது ஏற்கத்தக்கதல்ல; கண்டிக்கத்தக்கது.
எனவே, இப்பள்ளிகள் தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் கீழ் இயங்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

