sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பன்னீர்செல்வம் அழைப்பு; பழனிசாமி தரப்பு நிராகரிப்பு

/

பன்னீர்செல்வம் அழைப்பு; பழனிசாமி தரப்பு நிராகரிப்பு

பன்னீர்செல்வம் அழைப்பு; பழனிசாமி தரப்பு நிராகரிப்பு

பன்னீர்செல்வம் அழைப்பு; பழனிசாமி தரப்பு நிராகரிப்பு


ADDED : ஜூன் 06, 2024 07:48 PM

Google News

ADDED : ஜூன் 06, 2024 07:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'லோக்சபா தேர்தல் தோல்வியை தொடர்ந்து, கட்சியையும், ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க, எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுக்க, அதை பழனிசாமி தரப்பு உடனடியாக நிராகரித்தது.

அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை நடத்தி வரும் பன்னீர்செல்வம், பா.ஜ., கூட்டணியில் இணைந்து, ராமநாதபுரம் தொகுதியில் களம் இறங்கினார். தோல்வியை தழுவினாலும், அ.தி.மு.க., வேட்பாளரை பின்னுக்கு தள்ளி, இரண்டாம் இடம் பிடித்தார். மேலும், சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் வெளியேற்றத்தால், தென் மாவட்டங்களில் அ.தி.மு.க., கடும் சரிவை கண்டது.

பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறியதால், சிறுபான்மையினர் ஆதரவு கிடைக்கும் என, அ.தி.மு.க., தலைமை நம்பியது. அதற்கு மாறாக, அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியதுடன், சில தொகுதிகளில் டிபாசிட்டை பறி கொடுத்துள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியின் தோல்வியை தொடர்ந்து, 'பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைவோம்' என, சசிகலா அழைப்பு விடுத்தார். பன்னீர்செல்வம் ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகர், 'ஒருங்கிணைப்போம், ஒன்றிணைவோம்' என, 'போஸ்டர்' ஒட்டினார்.

அதன் தொடர்ச்சியாக, பன்னீர்செல்வம், அனைவரும் ஒன்றிணைய அழைப்பு விடுத்து, அறிக்கை வெளியிட்டார். 'ஒற்றை குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தை குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். நம் வெற்றியை நாளை சரித்திரமாக்க, மனமாட்சரியம் மறந்து, ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்து போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க, எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்' என, அறிக்கையில் கூறியிருந்தார்.

பன்னீர்செல்வம் அறிக்கை, அ.தி.மு.க.,வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனடியாக அ.தி.மு.க., துணை பொதுச் செயலரான, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:

பன்னீர்செல்வத்திற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. அ.தி.மு.க., பல்வேறு சோதனைகளை சந்தித்தபோது, சோதனைகளின் முக்கிய கருவதாக இருந்து, கட்சிக்கு சோதனைகளை கொடுத்தவர்.

பொதுக்குழு கூடியபோது, கட்சி தலைமை அலுவலகத்தை குண்டர்களை வைத்து, அடித்து நொறுக்கி, அங்கிருந்த ஆவணங்களை திருடிச் சென்றவர். அதைத் தொடர்ந்து, கட்சியின் சின்னத்தை முடக்க, நீதிமன்றம் சென்றவர்.

கட்சியை முடக்க வேண்டும் என்பதற்காக, அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்தார். நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்து, ராமநாதபுரம் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளரை, இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நின்றவர்.

இவருக்கு எந்த வகையில், அ.தி.மு.க., தொண்டர்களை அழைக்க உரிமை உள்ளது?

மேலும், ஜெயலலிதா பெயரை அவர் குறிப்பிட, எந்த உரிமையும் இல்லை. ஏனெனில் ஜெயலலிதாவை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மிகக் கடுமையாக விமர்சித்தார். ஜெயலலிதா மீது உண்மையான பாசம் இருந்தால், அண்ணாமலை பக்கத்தில் உட்கார மனம் வருமா?

இவர் எப்படி அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க அழைக்கலாம்? இதுபோன்ற அறிக்கைகளை இனிமேல் அவர் கொடுக்கக்கூடாது. இது எங்கள் பொதுச்செயலர் பழனிசாமி, தொண்டர்கள் கருத்து.

ஜெயலலிதா பின்னால் நின்று அதிகாரத்தை சுவைத்தவர் சசிகலா. இன்று இக்கட்சியை காப்பாற்றுவேன்; வாருங்கள் என்கிறார். அந்த அறிக்கை வெளியாகி, 24 மணி நேரமாகி விட்டது. எத்தனை பேர் சென்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த, ஒரு சிலர் முயற்சிக்கின்றனர். அந்த குழப்பத்தை தாண்டி, பழனிசாமி அனைவரையும் அரவணைத்து, கட்சி செயல்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பன்னீர்செல்வம்ஆதரவாளர்களுக்கு வலை


அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்கள், நீக்கப்பட்டவர்கள் போன்றோரிடம் பேசி, அவர்களை கட்சியில் இணைப்பதற்காக, முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய குழுவை, பழனிசாமி நியமித்துள்ளார்.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக உள்ள, முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர், மருதுஅழகுராஜ், முன்னாள் தகவல் தொழில்நுட்ப அணி செயலர் அஸ்பயர் சுவாமிநாதன், முன்னாள் எம்.பி.,யான கே.சி.பழனிசாமி உட்பட பலரை, மீண்டும் அ.தி.மு.க.,வுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.



அ.தி.மு.க., ஒன்றுபட சசிகலா உண்ணாவிரதம்?


சிதறி கிடக்கும் அ.தி.மு.க.,வினரை ஒன்றுபடுத்த, தொடர் உண்ணாவிரதம் இருக்க, சசிகலா திட்டமிட்டுள்ளதாக, அவரது ஆதரவு வட்டாரத்தில் கூறப்படுகிறது.இதுகுறித்து, சசிகலா ஆதரவாளர்கள் கூறியதாவது:அ.தி.மு.க.,வை பாதுகாக்க, சசிகலா தலைமையில் இணைய வேண்டும். அதற்காக, ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் அல்லது நீண்ட உண்ணாவிரதம் இருக்க, சசிகலா திட்டமிட்டுள்ளார்.
ஒற்றுமையை விரும்பும் தொண்டர்கள் அவருக்கு ஆதரவு தருவர். அதற்கான முயற்சியை சசிகலா எடுக்க உள்ளார். இனியும் அமைதியாக இருக்கக்கூடாது என, சசிகலாவிடம் தெரிவித்துள்ளோம். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவி ஏற்பு விழாவிற்கு வரும்படி, சசிகலாவிற்கு அழைப்பு வந்துள்ளது. அதன் பின், நல்ல முடிவை அறிவிப்பதாக சசிகலா, எங்களிடம் உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.***








      Dinamalar
      Follow us