'திமுக இரட்டை வேடம் போடுகிறது' - இ.பி.எஸ்., தாக்கு
'திமுக இரட்டை வேடம் போடுகிறது' - இ.பி.எஸ்., தாக்கு
ADDED : மார் 29, 2024 09:15 AM

மதுரை: 'பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியது என் முடிவல்ல. 2 கோடி தொண்டர்களின் முடிவு' என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.
மதுரை கே.கே.நகரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு இ.பி.எஸ்., அளித்த பேட்டி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். தோல்வி பயம் காரணமாக முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் பொய் பிரசாரம் செய்கின்றனர்.
கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்து, மத்திய அரசை பற்றி விமர்சிக்காமல் இருந்தோம். கூட்டணிக்குள் இருந்தால் விமர்சிக்க மாட்டோம். வெளியே வந்து விட்டால் விமர்சிப்போம். கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி அதிமுக. எங்களை நம்பி யார் வந்தாலும் கடைசி வரை விசுவாசமாக இருப்போம்.
டீசல் விலையை குறைக்க அதிமுக எம்.பிக்கள் முயற்சி மேற்கொள்வார்கள். அதிமுக வேட்பாளர்களும், கூட்டணி வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். தமிழகத்துக்கு எதிரான திட்டங்கள் இருந்தால் விமர்சிப்போம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். மோடியிடம் நேரில் சரணாகதி. வெளியில் வீரவசனம் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு. பிரதமர் மோடி தமிழகம் வந்த போது வெள்ளைக்குடை பிடித்து சென்றவர்கள் தானே இவர்கள்?. திமுக இரட்டை வேடம் போடுகிறது. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியது என் முடிவல்ல. 2 கோடி தொண்டர்களின் முடிவு. இவ்வாறு அவர் கூறினார்.

