அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம்: மருத்துவ கல்லுாரிகள் மீது பெற்றோர் புகார்
அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம்: மருத்துவ கல்லுாரிகள் மீது பெற்றோர் புகார்
ADDED : செப் 15, 2024 12:46 AM

சென்னை: சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேரும் மாணவர்களிடம், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, 6 லட்சம் ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாக, பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில், 22 சுயநிதி மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இதில், சிறுபான்மையினர் கல்லுாரிகளில், 50 சதவீதம்; மற்ற கல்லுாரிகளில், 65 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு தரப்படுகின்றன. சிறுபான்மை கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 35 சதவீதம்; மற்ற கல்லுாரிகளில், 20 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான, என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டிற்கு செல்கிறது.
அரசு ஒதுக்கீடு இடத்திற்கு, 4.50 லட்சம்; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 13.50 லட்சம் ரூபாய் என, அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில், முதற்கட்ட மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது.
இந்நிலையில், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக 6 லட்சம் ரூபாய் வரை, கல்வி நிறுவனங்கள் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெற்றோர் கூறியதாவது:
அரசு நிர்ணயித்த கட்டணத்தை, எந்த கல்வி நிறுவனமும் வசூலிப்பதில்லை. அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு, விடுதி, உணவு, ஆய்வகம், பஸ் கட்டணம் என, பல்வேறு காரணங்களை கூறி, 9 லட்சம் ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கின்றனர்.
நிர்வாக ஒதுக்கீட்டில், 19 லட்சம்; என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில், 29 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்றவற்றில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் தான் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் பல மடங்கு வசூலிக்கின்றனர்.
முதற்கட்ட கவுன்சிலிங்கில், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்கள், அடுத்தகட்ட கவுன்சிலிங்கில், மற்றொரு கல்லுாரிக்கு சென்றால், கட்டணம் திருப்பி தரப்படாது என, எழுதியும் வாங்கிக் கொள்கின்றனர். கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் சுப்பிரமணியன் கூறி வருகிறார்.
ஆனால், நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இனியாவது அரசு அதிகாரிகள் தலையிட்டு, மருத்துவ கல்லுாரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடவடிக்கை எடுக்க
ஆணைத்துக்கு பரிந்துரை!
''சுயநிதி கல்லுாரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக, புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக குழு அமைத்து விசாரித்து வருகிறோம். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தேசிய மருத்துவ ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்படும்.
- ஜெ.சங்குமணி,
இயக்குனர்,
மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம்.