பணத்தை நோக்கி ஓடும் பெற்றோர் ஐகோர்ட் நீதிபதி வேதனை
பணத்தை நோக்கி ஓடும் பெற்றோர் ஐகோர்ட் நீதிபதி வேதனை
ADDED : ஆக 31, 2024 12:37 AM
சென்னை:'பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெற்றோர் ஓடுவதால், குழந்தைகளை சரிவர கவனிப்பதில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
சென்னை சேலையூரை சேர்ந்த பெண், தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தன் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
கூலி வேலை செய்து வரும் பெண்ணின் 13 வயது மகன், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்தாண்டு பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மகன் வீடு திரும்பவில்லை.
மகன் காணாமல் போனது குறித்து, சேலையூர் போலீசில் தாய் புகார் அளித்தார். புகாரை அடுத்து சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன 13 வயது சிறுவனை தேடிவந்தனர்; அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில், காணாமல் போன மகனை மீட்டுத் தரக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தாய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, 'ஓராண்டுக்கு மேலாகியும், போலீசாரால் காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்கவில்லை. பள்ளிக்கு சென்ற மகன் காணாமல் போனதை அடுத்து, மனதளவில் அவரது தாய் பாதிக்கப்பட்டுள்ளார்' என்றார்.
இதையடுத்து, 'போலீசார் ஓராண்டாக சிறுவனை தேடி வருகின்றனர். சிறுவன் மொபைல் போன் பயன்படுத்தாததால், அவனின் நகர்வை கண்டறிவதில் சிரமம் இருப்பதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இன்றைய பெற்றோர் பலர் ஓடுகின்றனர். ஆகையால், அவர்கள் குழந்தைகளை சரிவர கவனிப்பதில்லை.
'இந்த வழக்கில், சிறுவனை அவனின் பெற்றோர் சரியாக கவனித்து இருந்தால் ஓடியிருக்க வாய்ப்பில்லை.
பெற்றோர், தங்கள் குழந்தைகளை சரிவர கவனித்துக் கொண்டால், இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லை' என, கவலை தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.