'சர்வர்' குளறுபடியால் முடங்கும் 'பரிவாஹன்': வாகன ஓட்டிகள் அவதி
'சர்வர்' குளறுபடியால் முடங்கும் 'பரிவாஹன்': வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஆக 05, 2024 02:27 AM

சென்னை: பரிவாஹன் இணையதளத்தில், வாரத்தில் மூன்று நாட்கள், 'சர்வர்' பிரச்னை ஏற்படுவதால், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பெற முடியாமல், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில், 150 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் யூனிட் அலுவலகங்களில், ஓட்டுனர் உரிமம், புதிய வாகனங்கள் பதிவு, உரிமம் புதுப்பித்தல் உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன.
இந்த சேவைகளை பெற, https://parivahan.gov.in/parivahan/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஆனால், பெரும்பாலான வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், வாரத்தில் மூன்று நாட்களில், அடிக்கடி, 'சர்வர்' பிரச்னை ஏற்படுவதால், இந்தப் பணிகள் முடங்குகின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன சங்க மாநில பொதுச்செயலர் ஜூட் கேத்யூ கூறியதாவது:
ஓட்டுனர் உரிமம், வாகன உரிமம் புதுப்பிப்பு உள்ளிட்ட சேவை பெற, பரிவாஹன் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மத்திய போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ், இந்தஇணையதளம் செயல்படுகிறது.
ஆனால், இந்த இணையதளத்தில், அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்படுகிறது. முன்பெல்லாம் எப்போதாவது தான் பிரச்னை ஏற்படும். சமீப காலமாக வாரத்தில் மூன்று நாட்கள் விட்டு, விட்டு சர்வர் பிரச்னை ஏற்படுகிறது.
ஒவ்வொரு முறையும், பாதி அளவில் தான் விண்ணப்பிக்க முடிகிறது. திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, மீண்டும் முதல் பக்கத்திற்கே வந்து விடுகிறது.
ஆன்லைனில் கட்டணம் செலுத்தவோ, அதற்கான ரசீது பெறவோ முடியவில்லை.
மீண்டும் அடுத்த நாள் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. அதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் தொடர்பாகன ஆவணங்கள் பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சில சேவைகளை பெறுவதில், அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது உண்மை தான். இதுகுறித்து, தலைமை அலுவலகத்திற்கு புகார் தெரிவித்துள்ளோம். மாநில போக்குவரத்து ஆணையரகம், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவில்லை. மத்திய போக்குவரத்து அமைச்சகத்துக்கு, தகவல் சென்றதா என்றும் தெரியவில்லை.
- வட்டார போக்குவரத்து அதிகாரிகள்