ADDED : மே 01, 2024 11:20 PM
சென்னை:'அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி, தண்ணீர் பந்தல் திறக்க, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனுமதி அளிக்கலாம்' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இலவசமாக தண்ணீர் வினியோகம் செய்வதற்காக, அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்க, அனுமதி கோரி உள்ளன.
தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் அனுப்பிய கடிதத்தில், தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில், தண்ணீர் பந்தல் திறக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்துள்ளது.
எந்த ஒரு அரசியல் கட்சியும், வேட்பாளரும், தண்ணீர் பந்தல் திறப்பதன் வழியே, எந்தவிதத்திலும் அரசியல் ரீதியாக பயன்பெறக் கூடாது.
தண்ணீர் பந்தல் திறப்பின்போது, தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
எனவே, தண்ணீர் பந்தல் திறக்க விரும்பும் கட்சியும், வேட்பாளரும், தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, சுகாதாரம், துாய்மையான குடிநீர் தொடர்பாக, அரசின் பிற அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும்.
அவர்களின் கோரிக்கை அடிப்படையில், தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனுமதி அளிக்கலாம். அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், அவரவருடைய எல்லைக்குள், சரியான முறையில், தண்ணீர் பந்தல் செயல்பாடுகள் நடக்கின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

