'தமிழகத்தில் 2026ல் பா.ஜ., ஆட்சியை பிடிக்க கட்சியினர் உழைக்க வேண்டும்'
'தமிழகத்தில் 2026ல் பா.ஜ., ஆட்சியை பிடிக்க கட்சியினர் உழைக்க வேண்டும்'
ADDED : ஆக 15, 2024 07:13 PM

சென்னை:''தமிழகத்தில், 2026ல் பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைய, கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில், பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், அண்ணாமலை ஆகியோர் நேற்று தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். பின், இளைஞரணி சார்பில் தேசிய கொடி ஏந்தி செல்லும் வாகன பேரணியை, அண்ணாமலை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அண்ணாமலை பேசியதாவது:
சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, 'ஒரே நாடு; ஒரே தேர்தல் வேண்டும்; எந்த மதமும் சாராத சட்டங்கள் இருக்க வேண்டும்; இளைஞர்கள் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.
தமிழகம், மாற்றத்திற்காக காத்து கொண்டிருக்கிறது. தேசியம், தமிழக மண்ணில் பரவ வேண்டும்; இழந்த அந்தஸ்தை தமிழகம் பெற வேண்டும். கட்சியினர் அனைவரும் கடுமையாக உழைப்போம். வரும், 2026 சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநயாக கூட்டணி அரசு சார்பில், தேசியக்கொடி ஏற்றுவதற்கான வாய்ப்பை தர மக்கள் தயாராக உள்ளனர்.
கட்சியினரின் உழைப்பால் மக்களின் அங்கீகாரத்தை பெற்று, பா.ஜ., கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும். வளர்ந்த பாரதம் வர வேண்டும் என்றால், வளர்ந்த தமிழகம் வர வேண்டும். வளர்ந்த தமிழகம் வர வேண்டும் என்றால், தி.மு.க., ஆட்சியில் இருக்கக் கூடாது; பா.ஜ., கூட்டணி ஆட்சியில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

