இலங்கைக்கு பயணியர் கப்பல் 13 முதல் மீண்டும் இயக்கம்
இலங்கைக்கு பயணியர் கப்பல் 13 முதல் மீண்டும் இயக்கம்
ADDED : மே 06, 2024 01:04 AM

நாகப்பட்டினம்: நம் அண்டை நாடான இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டையின் போது, அந்நாட்டின் காங்கேசன் துறைமுகம் சேதமானது. துறைமுகத்தை சீரமைக்க இந்திய அரசு 2018ல், 300 கோடி ரூபாய் நிதி வழங்கியது. வர்த்தக ரீதியாக கட்டமைக்கப்பட்ட காங்கேசன் துறைமுகம், கடந்த ஆண்டு ஜூனில் திறக்கப்பட்டது.
இந்தியா - இலங்கை இடையே வர்த்தகம், சுற்றுலா மேம்பட கப்பல் சேவையை துவக்க, நாகப்பட்டினத்தில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் காங்கேசன் துறைமுகத்திற்கு, சிறிய பயணியர் கப்பல்களை இயக்க பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து, நாகப்பட்டினம் துறைமுகத்தை, 3 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தும் பணிகள் நடந்தன.
இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான, 150 பயணியர் பயணிக்கும் வகையில் குளிர்சாதன வசதியுடன் உருவாக்கப்பட்ட, 'சிரியா பாணி' என்ற சிறிய கப்பல், கடந்த ஆண்டு அக்., 14ல் இயக்கப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடி, காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
சுற்றுலா பயணியரிடம் ஆர்வம் குறைவு, கடலின் பருவ மாற்றத்தால் சில தினங்களில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தனியார் வசம் கப்பல் போக்குவரத்து சேவை ஒப்படைக்கப்பட்டு, வரும் 13 முதல், இலங்கைக்கு மீண்டும் பயணியர் கப்பல் போக்குவரத்து துவங்குகிறது.
தனியார் கப்பல் போக்குவரத்து நிர்வாக இயக்குனர் நிரஞ்சன் நந்தகோபன் கூறியதாவது:
சிரியா பாணி என்ற சிறிய கப்பல், வரும் 13 காலை 8:00 மணிக்கு நாகையில் புறப்பட்டு பகல், 12:00 மணிக்கு காங்கேசன் துறைமுகம் சென்றடையும். அங்கிருந்து மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு மாலை 6:00 மணிக்கு நாகைக்கு வந்தடையும்.
இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை. சுங்கத்துறை விதிகளுக்கு உட்பட்டு பயணியர் அனுமதிக்கப்படுவர். பயணியர் www.SailIndSri.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயணிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.