கோவை, பெங்களூருவுக்கு நேரடி ரயில் பயணியர் சங்கம் வலியுறுத்தல்
கோவை, பெங்களூருவுக்கு நேரடி ரயில் பயணியர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : மார் 03, 2025 05:49 AM
மதுரை: தென்காசி மார்க்கத்தில் மதுரை வழியாக கோவை, பெங்களூருவுக்கு நேரடி ரயில்கள் இயக்க வேண்டும் என, பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.
தென்மாவட்டங்களில் இருந்து கல்வி, வேலை காரணமாக பலர் பெங்களூரு, கோவையில் வசிக்கின்றனர். விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல போதிய ரயில்கள் இல்லை என்ற ஏக்கம் அவர்களிடம் உள்ளது. திருநெல்வேலி மார்க்கமாக நாகர்கோவில் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - நாகர்கோவில் (17236/17235), துாத்துக்குடி மார்க்கமாக மைசூரு - துாத்துக்குடி - மைசூரு (16235/16236) ஆகிய 2 ரயில்கள் மட்டுமே தினசரி இயக்கப்படுகின்றன.
மதுரை - பெங்களூரூ இடையே வந்தே பாரத் ரயில் (20671/20672) செவ்வாய் தவிர்த்து இயக்கப்படுகிறது. நாகர்கோவில் - கோவை இடையே இரவிலும் (22667/22668), பகலிலும் (16321/16322) தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை பகுதி மக்கள் பெங்களூரு, கோவை செல்ல நேரடி ரயில் சேவை இல்லை.
ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கத்தினர் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கிடம் அளித்த மனுவில், ''புனலுார், தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, மதுரை, பழநி, பொள்ளாச்சி, கோவை வழியாக கொல்லம் - ஈரோடு, கொச்சுவேலி - பெங்களூரு இடையே தென்காசி, ராஜபாளையம், மதுரை, கரூர், சேலம் வழியாகவும் இரவு நேர ரயில்களை இயக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளனர்.
வாரம் ஒருநாள் ஏ.சி., சிறப்பு ரயிலாக இயக்கப்படும் தாம்பரம் - கொச்சுவேலி ரயிலில் சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், பொதுப் பெட்டிகள் இணைத்து வாரம் இருமுறை இயக்க வேண்டும். மதுரை, திருச்சி வழியாக திருவண்ணாமலை, திருப்பதிக்கு ரயில்கள் இயக்க வேண்டும்.
வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் சிலம்பு ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். சிலம்பு ரயில் டிக்கெட் முன்பதிவில் சங்கரன் கோவில் வரை இருக்கும் பொது ஒதுக்கீட்டை ராஜபாளையம் வரை நீட்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து டிக்கெட் முன்பதிவில் மார்ச் 26 முதல் ராஜபாளையம் வரை பொது ஒதுக்கீட்டில் வழங்க ரயில்வே தரப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதியினருக்கு கூடுதல் இருக்கைகள் கிடைக்கும்.